விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் தொடர்புடைய 205 இடங்களில் போலீசார் அதிரடி சோதனை, கஞ்சா குற்றவாளிகளின் 110 வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தகவல் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் தொடர்புடைய 205 இடங்களில் இன்று காலை முதல் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, செஞ்சி, மேல்மலையனூர், மயிலம், திண்டிவனம், மரக்காணம், வானூர், ஆரோவில், கண்டமங்கலம், திருவெண்ணைநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் உள்ள கஞ்சா தொடர்புடைய குற்றவாளிகளின் வீடு, கடை மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே கஞ்சா விற்பனை செய்தவர்கள், கஞ்சா கடத்தலில் ஈடுபட்டவர்கள் என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ள குற்றவாளிகள் தொடர்ந்து, அந்த செயல்களில் ஈடுபட்டு வருகிறார்களா, கஞ்சா பதுக்கி வைத்திருக்கிறார்களா என்பதை கண்டறிந்து, நடவடிக்கை எடுக்கும் வகையில் போலீசார் நடத்திவரும் இந்த அதிரடி சோதனையில், இதுவரை இரண்டு பேரின் வீடுகளில் இருந்து, கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. விழுப்புரம் நகருக்குட்பட்ட என்.ஜி.ஜி.ஓ காலனி பகுதியில் உள்ள கஞ்சா குற்றவாளியின் வீட்டில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த வீட்டில் இருந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட பழைய குற்றவாளி, தான் திருந்தி வாழ்ந்து வருவதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் தெரிவித்தார். விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து கஞ்சா தொடர்புடைய குற்றவாளிகளுக்கு சொந்தமான வீடு, கடை மற்றும் குடோன்களில் போலீசார் தொடர்ந்து தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 205 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், பழைய குற்றவாளிகள் மீண்டும் கஞ்சா விற்பனை தொழிலில் ஈடுபடுவதைத் தடுக்கவும் இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், கஞ்சா விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் நேரிடியாக தனது 9498111103 என்ற வாட்ஸ் அப் எண்ணில் தொடர்பு கொண்டோ அல்லது மெசேஜ் மூலமாகவோ தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், தகவல் அளித்தவர்களின் விவரங்கள் ரகசியம் காக்கப்படும் என்றும், விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 110 கஞ்சா குற்றவாளிகளின் வங்கிக் கணக்குகளை முடக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தெரிவித்தார்.