நாசா விஞ்ஞானிக்கு செஞ்சியில் நடந்த திருமணம்.. அமெரிக்க பெண்ணை கரம்பிடித்த தமிழர்
நாசா ஆராய்ச்சியாளருக்கு செஞ்சியில் கல்யாணம்.அமெரிக்க பெண்ணை தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் செய்து கொண்ட வெளிநாடு வாழ் தமிழர்.

விழுப்புரம்: செஞ்சியில் நாசா ஆராய்ச்சியாளர் அமெரிக்க பெண்ணை தமிழ் கலாச்சாரம் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சிறுகடம்பூர் பகுதியில் அமைந்துள்ள ஏகாம்பரஸ்வரர் உடனுறை காமாட்சி ஆலயத்தில் அமெரிக்க பெண்ணுடன் தமிழகத்தை சேர்ந்தவருடன் தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் செய்யாறு தாலுக்கா அருக்காவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவர் அமெரிக்காவில் உள்ள தனியார் கம்பெனியில் இயக்குனராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது மனைவி ஆதிரை மற்றும் தனது இரண்டு மகன்களுடன் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா டெக்ஸாஸ் மாகாணத்தில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது மூத்த மகன் அவினாஷ் நாசாவில் அறிவியல் ஆராய்ச்சியாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர் அமெரிக்காவில் வசித்து வந்த கேத்தரின் ஓசேவி என்பவரை காதலித்து இரு வீட்டார்கள் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு நடந்த நிலையில் பெற்றோரின் ஒப்புதலோடு தங்களது குலதெய்வ கோவிலான செஞ்சி ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்தில் திருமணம் நடைபெற்றது.
தமிழ் கலாச்சார முறைப்படி பெண் அழைப்பு, மாப்பிள்ளை அழைப்பு மற்றும் மணமேடையில் தமிழ் கலாச்சாரப்படி புரோகிதர் வேத மந்திரங்கள் ஓத நாதஸ்வர இசையுடன் திருமணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
திருமணம் குறித்து அமெரிக்காவில் வாழும் திருமண ஜோடிகள் இருவரும் தமிழ் கலாச்சாரத்தில் திருமணம் செய்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சியாக இருந்ததாக கூறினார்.
மேலும் பெற்றோரும் தங்கள் குலதெய்வ கோயிலில் மகனுக்கு திருமணம் நடைபெற வேண்டும் என பல்லாயிரம் கிலோ மீட்டர் கடந்து குலதெய்வ கோயிலில் மகனுக்கு தமிழ் கலாச்சாரப்படி திருமணம் செய்து வைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
தமிழ் கலாச்சார முறைப்படி திருமணம் நடைபெற்ற மணமக்களை, மணமகன் மணமகள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தமிழ் உறவுகளோடு வாழ்த்திய நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.





















