நாடாளுமன்ற தேர்தல்
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி நாளை தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் 39 தொகுதிகள், புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளிலும் ஏப்ரல் 19-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும் நேற்று மாலையுடன் பிரச்சாரம் நிறைவடைந்தது.
வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பும் பணி
விழுப்புரம் தனி பாராளுமன்ற தொகுதியிலுள்ள 1068 வாக்கு சாவடி மையங்களுக்கு மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள் உபகரணங்கள் போலீசார் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கபட்டன. விழுப்புரம் தொகுதியில் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர் வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர் .
பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது. தேர்தலுக்கான வாக்குசாவடி மையங்களுக்கு தேவையான மின்னனு வாக்குபதிவு இயந்திரங்கள், பென்சில்,பேனா அட்டை, சீல், நூல் கண்டு மை அடங்கிய பொருட்கள் தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்போடு விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திலிருந்து வாகனம் மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கபட்டது.
பதற்றமான வாக்குச்சாவடி
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியை பொறுத்த வரை விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூர், திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு இடங்களிலிருந்து வாக்கு சாவடி மையங்களுக்கு தேர்தல் உபகரணங்கள் மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கபட்டன. விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு பதிவிற்காக 1068 வாக்கு சாவடி மையங்களில் 1966 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதல் 51 வாக்கு சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டு சிசிடிவி கேமராக்கள் பொருத்தபட்டுள்ளன.
வாக்காளர்கள் எண்ணிக்கை
விழுப்புரம் தனி தொகுதியில் 7 லட்சத்து 40 ஆயிரத்து 412 ஆண் வாக்காளர்களும், 7 லட்சத்து 53 ஆயிரத்து 638 பெண் வாக்காளர்களும் மாற்றுபாலினத்தவர் 209 பேர் என மொத்தம் 14 லட்சத்து 94 ஆயிரத்து 259 பேர் வாக்களிக்க உள்ளனர் .
இதற்காக 4152 வாக்கு பதிவு கருவிகளும், 2076 கன்ரோல் யூனிட் எனப்படும் கட்டுப்பாட்டு கருவிகளும், 2249 வி.வி.பேட் எனப்படும் உறுதிப்படுத்தும் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன. தேர்தல் வாக்குபதிவு மையங்களில் பாதுக்காப்பிற்காக 2200 காவல்துறையினரும், 344 துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியிலும், 6804 பேர் தேர்தல் அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தேர்தல் வாக்கு பதிவு பணிகள் அனைத்தும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தலைமையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.