கள்ளக்குறிச்சி: மலேசியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் உடல்நிலை சரியில்லாததால், தன்னை தாயகம் அழைத்து வர வேண்டுமென முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த இரண்டாம் தேதி மலேசியாவில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வேலைக்கு சென்ற நாள் முதல் தனக்கு மலேசியாவின் தட்பவெப்ப நிலை ஒத்துப்போகவில்லை எனவும்,இதன் காரணமாக உடம்பில் கொப்பளங்கள் வருகிறது எனவும், மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றும்  தமது பெற்றோர்களிடம் தெரிவித்த பிரவீன் குமார், மேலும் தன்னை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் ஏஜென்டு மூலமாக வேலைக்குச் சென்றதால் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சருக்கும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் இளைஞர் பிரவீன் குமார் .


அந்த வீடியோவில், தான் மலேசியாவிற்கு வேலைக்காக வந்ததாகவும் ஆனால் வந்த இடத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடலில் கொப்பளங்கள் வருகிறது எனவும் கூறி தன்னை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இதே போல தனது மகனை மீட்டு தர வேண்டும் என பிரவீன் குமாரின் தாய் தந்தை ஆகிய இருவரும் கைகூப்பி மண்டியிட்டு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.