உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு புகார்கள் தீட்சிதர்கள் மீது எழுந்தது.


குறிப்பாக தலித் பெண் ஒருவரை அவதூறாக பேசியது, கனகசபை மீது ஏறி சுவாமி தரிசனம் செய்ய தடை விதித்தது. ஆயிரங்கால் மண்டபத்தில் கோடீஸ்வரர் திருமணம் நடத்தியது என அடுக்கடுக்காக புகார்கள் வந்த நிலையில்  கடந்த ஜூன் மாதம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோயிலுக்கு வந்து நேரில் ஆய்வு செய்து சென்ற இரண்டு தினங்களில் இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது. அப்போது ஆய்வுக்கு கோவில் பொது தீட்சிதர்கள் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.


இரண்டு நாள் ஆய்வுக்கு வந்த அதிகாரிகளுக்கு தீட்சிதர்கள் ஒத்துழைப்பு அளிக்காததால் அதிகாரிகள் மீண்டும் திரும்பி சென்றனர். கோவில் நலன் சார்ந்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கருத்து கூறலாம் என இந்து அறநிலைத்துறை அறிக்கை வெளியிட்டது.


இதில் மொத்தம் 19 ஆயிரத்து 405 மனுக்கள் பெறப்பட்டதில் தீட்சிதர்களுக்கு எதிராக 14,098 மனுக்கள் வந்துள்ளதாகவும் அதில் பெண்களை மரியாதை இல்லாமல் தர குறைவாக நடத்துவது, குழந்தை திருமணம் செய்வது, காணிக்கைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை, நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீண்டாமை சுவர் கட்டியது உள்ளிட்ட 28 முக்கிய புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக இந்து அறநிலைத்துறை சார்பில் கோவில் தீட்சிதர்களுக்கு கடிதம் அனுப்பப்பட்டது.


இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்து இந்து அறநிலையத்துறைக்கு கடிதம் ஒன்றை கோவில் தீட்சிதர்கள் அனுப்பினர். அதில் தனி பிரிவினரால் உச்ச நீதிமன்றம் தீர்ப்பின்படி அரசியல் சாசனம் படியும் நிர்வாகிக்கப்பட்டு வரும் நடராஜர் கோயிலில் எந்தவிதமான ஆய்வுகளையும் மேற்கொள்ள முடியாது எனவும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்க முடியாத இந்துக்களுக்கு எதிரான சில அமைப்புகள் திட்டமிட்டு சில பொய் பிரச்சாரத்தை செய்து வருகின்றனர் என குறிப்பிடப்பட்டது.


இந்த நிலையில் நகை ஆபரணங்கள் கணக்கு வழக்குகளை இந்து அறநிலைத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றால் ஆகஸ்ட் 2 வாரங்களுக்கு பிறகு மேற்கொள்ள வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.


இந்நிலையில் இன்று இந்து அறநிலைத்துறை கடலூர் மாவட்ட துணை ஆணையர் ஜோதி,விழுப்புரம் மாவட்ட துணை ஆணையர் சிவலிங்கம், திருவண்ணாமலை மாவட்ட துணை ஆணையர் குமரேசன் தலைமையில் நகை மதிப்பு வல்லுநர்கள் குமார் குருமூர்த்தி,தர்மலிங்கம் கொண்ட 6 பேர் கொண்ட குழுவினர் கோவிலில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண