விழுப்புரம்: முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வாயிலில் செயல்படும் உணவகத்தில் உணவுபாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது உணவக உரிமையாளர் உணவகத்தை மூடியதால் அதிகாரிகள் சுவர் எகிறிகுதித்து ஆய்வு செய்து பத்தாயிரம் அபராதம் விதித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் மாவட்ட அரசு தலைமை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு கோலியனூர், சிறுவந்தாடு, வானூர், கண்டாச்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சார்ந்த மக்கள் நாள் தோறும் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அப்படி சிகிச்சைக்காக வந்து செல்லுபவர்கள் மருத்துவமனை வளாகத்திலுள்ள ஹோட்டல்களில் உணவு வாங்கி பருகின்றனர். நோயாளிகளின் குடும்பத்தினர் ஹோட்டல்களில் வாங்கும் உணவு சுகாதாரமற்ற முறையில் சமைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு புகார் வந்தன.
இந்த புகாரை தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சுகந்தன் தலைமையிலான குழுவினர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை வாயிலில் செயல்படும் ஹோட்டலில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது மருத்துவமனை வளாகத்தினுள் உள்ள மாலதி மெஸ்சில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வுக்கு வருகிறார்கள் என்ற தகவல் தெரிந்தவுடன் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டல் வாயிலில் போடப்படும் தார்பாய்களை மூடிவிட்டு ஹோட்டல் உள்ளே ஒளிந்து கொண்டனர்.
இதனை கண்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தார்பாய்களை விலக்கிவிட்டு சுவர் எகிரி குதித்து உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்வது தெரியவரவே இரு ஹோட்டலுக்கும் 5 ஆயிரம் வீதம் பத்தாயிரம் அபராதம் விதித்து எச்சரிக்கை செய்து இது போன்ற சுகாதரமற்ற உணவு தயார் செய்து விற்பனை செய்தால் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்படுமென எச்சரிக்கை செய்தனர்.