நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவு


நாட்டுற கலைஞர்கள் அரசு பேருந்தில் பயணிக்க பாதி கட்டணமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், நாட்டுப்புற கலைஞர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிகளுக்கே நாடாளுமன்ற தேர்தலில் ஆதரவளிப்போமென நாட்டுபுற கலைஞர் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். 

தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மாநில நலச்சங்கத்தின் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் விழுப்புரத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில தலைவர் சத்தியராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் தங்க ஜெயராஜ் அனைவரையும் வரவேற்றார். மாநில பொருளாளர் நாகூர்கனி, மாநில ஆலோசகர் பழனி, துணைத்தலைவர் செல்வகண்ணன், துணைச்செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில், நாட்டுப்புற கலைஞர்கள் ஆடை ஆபரணங்கள், இசை கருவிகள் 500-லிருந்து 1,000 பேருக்கு வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களில் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு அரசு பஸ்களில் முழு கட்டணமின்றி இலவசமாக பயணிப்பதற்கு அரசு ஆவண செய்ய வேண்டும், நலிந்த கலைஞர்கள் நிதியுதவி திட்டம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.6 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்,


நலிவுற்ற கலைஞர்களுக்கு இலவச மனைப்பட்டா


மாவட்ட கலை விருது 25 கலைஞர்களுக்கு வழங்கி சிறப்பிக்க வேண்டும், பெண் கலைஞர்களுக்கான ஓய்வூதிய வயதை 50 ஆக நிர்ணயித்து ஓய்வூதியம் வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களுக்கான நலவாரியத்தை அரசு முறையாக செயல்படுத்த வேண்டும், நலிவுற்ற கலைஞர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளுக்கே வருகிற நாடாளுமன்ற தேர்தலில் முழு ஆதரவு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் பெரியசாமி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வம் நன்றி கூறினார்.