கடலூர்: கடலூர் மாநகரில் பிரதான பேருந்து நிலையம், லாரன்ஸ்ரோடு பகுதியில் முதற்கட்ட மின்கேபிள் புதைக்கும் பணிக்கு அரசு 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது.
மின்கேபிள் புதைக்கும் பணி - 245 கோடி ரூபாய் ஒதுக்கீடு
கடலூர் மாவட்டம், கடந்த 2011ம் ஆண்டு வீசிய தானே புயலால் பெரும் பாதிப்பிற்குள்ளானது. 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் கம்பங்கள், டிரான்ஸ் பார்மர்கள், துணை மின் நிலையத்திற்கு வரும் உயர்மின் கோபுரங்கள் சாய்ந்தன. மாவட்டத்தின் தலைநகரான கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் 4 நாட்களாக மின்சாரம் இல்லை. தலைமை செயலகத்திற்கு கூட தகவல் தெரிவிக்க மின்சாரம் இல்லாமல் அரசு அதிகாரிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கடலூர் மாவட்டமே தகவல் தொடர்பில் இருந்து துண்டிக்கப்பட்டது. இந்த மின்தடையால் ஏற்பட்ட பாதிப்பு அரசுக்கு ஒரு பாடமாக இருந்தது. எதிர் காலத்தில் புயல், மழை, சுனாமி போன்ற பேரிடர் நிகழ்வின் போது மின்சாரம் முற்றிலும் தடைபட்டுவிடக்கூடாது என கருதி புதை வடமின்கேபிள் அமைக்க வேண்டும் என அரசுக்கு முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன. பேரிடரில் அடிக்கடி பாதிக்கப்படுகிற மாவட்ட தலைநகரங்களில் புதைவட கேபிள் போட முடிவு செய்யப்பட்டது.
ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது
உலக வங்கி உதவியுடன் இத்திட்டத்தை நிறைவேற்ற கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு 800 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி கடலூர் மாநகரம் மட்டும் 3 பகுதிகளாக பிரிக்கப்பட்டது. அதில் 2018ம் ஆண்டு கடலூர் மாநகரில் 2 கட்டமாக டெண்டர் விடப்பட்டு பணிகள் நிறைவேற்றப்பட்டன. இதில் கடலோர கிராமங்களுக்கு தனிக்கவனம் செலுத்தி கேபிள் போடப்பட்டது. தற்போது பணிகள் முடிக்கப்பட்ட 2, 3 பகுதிகளில் தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. ஓராண்டு காலம் மின் கேபிள் வழியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
இதனால் தொழிற்சாலைகளுக்கு ஜெனரேட்டர் இயக்கும் வாய்ப்பு குறைந்துள்ளதால் பல லட்சம் ரூபாய் எரிபொருள் மிச்சமாகி இருக்கிறது. அதேப்போல மின்வாரி யத்திலும் மின்சாரத்தை நிறுத்தி வைத்து பழுது அகற்றுவதால் ஏற்படும் இழப்பும் குறைந்துள்ள தால் மின்வாரியத்திற்கும் லாபமாக உள்ளது. முதல் கட்டத்தில் இது வரை மின்சார கேபிள் போடப்படவில்லை.
245 கோடி ரூபாய் ஒதுக்கீடு
அண்ணா மேம்பாலத்திற்கு மேற்கிழ் உள்ள பேருந்து நிலையம் அதை சுற்றியுள்ள பகுதிகள், திருவந்திபுரம் சாலையில் நகராட்சி எல்லை வரை, வடக்கு பகுதியில் கம்மியம்பேட்டை பாலம் வரையும், தெற்கே மோகினிப்பாலம் வரையிலும் முதற்கட்ட பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதி முழுதும் மின் கேபிள் அமைக்க வேண்டும். ஆனால் ஏராளமான கடைகள், வணிக நிறுவனங்கள், 24 மணி நேரமும் பிசியாக இருக்கும் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின் கேபிள் அமைக்க வேண்டும். ஆனால் அரசிடம் இருந்து நிதி ஒதுக்கீடு பெற முன்மொழிவுகள் அனுப்பப்பட்டன.
இத்திட்டத்திற்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளது. நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் கடலுார், நாகப்பட்டினம் மாவட்டங்களுக்கு சேர்த்து 490 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதில் கிட்டதட்ட 245 கோடி கடலூர் மாவட்டத்திற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.