விழுப்புரம் : பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகள் நவம்பர் 7ம் தேதிக்குள் தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்.

Continues below advertisement

பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம்

பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தின்கீழ் பயன்பெறும் விவசாயிகள், வருகிற நவம்பர் 7ம் தேதிக்குள் தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றுக்கொள்ள வேண்டும் என விழுப்புரம் வேளாண்மை இணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.  விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது 20103 விவசாயிகள் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டத்தில் பயன்பெற தனித்துவ அடையாள எண் பெறாமல் உள்ளனர். மத்திய அரசு மூலம் வழங்கப்படும் ஆண்டுக்கு ரூ.6000/- உதவித் தொகை பெறுவதற்கு தனித்துவ அடையாள எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் அரசின் பல்வேறு வேளாண் சார்ந்த திட்டப்பலன்களை பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதில் ஏற்படும் காலதாமதத்தைத் தவிர்க்கும் வகையிலும், விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும், தமிழ்நாட்டில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது விவசாயிகளின் பதிவு விவரங்களுடன், ஆதார் எண், கைப்பேசி எண், நில உடைமை விவரங்களை விடுபாடின்றி இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Continues below advertisement

விவசாயிகள் பொது சேவை மையத்தின் மூலம் தங்களின் நில உடைமை விவரங்கள் இணைக்கப்பட்ட பின்னர், அனைத்து விவரங்களும் ஒருங்கிணைக்கப்பட ஆதார் எண் போன்ற தனித்துவமான தேசிய அளவிலான அடையாள எண் ஒவ்வொரு விவசாயிக்கும் பதிவு செய்து தரப்படும். 2025-26ம் ஆண்டு முதல் பிரதம மந்திரி கௌரவ நிதி திட்டம் மற்றும் பயிர் காப்பீடு திட்டம் போன்ற ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்களில், விவசாயிகள் எளிதில் பயன்பெறலாம். இத்திட்டத்தில் 21வது தவணை தொகையினை பெறுவதற்கு, விவசாயிகளின் தனித்துவ அடையாள எண் பெற்றிருத்தல் அவசியம்.

1000-1500 நபர்களும் விவசாயி தனி அடையாள எண் பெறாமல் உள்ளனர்

விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூர் வட்டாரத்தில் 2397 நபர்களும், மேல்மலையனூர் வட்டாரத்தில் 2393 நபர்களும், செஞ்சி வட்டாரத்தில் 2639 நபர்களும், காணை வட்டாரத்தில் 1955 நபர்களும், வல்லம், கண்டமங்கலம், முகையூர், வானூர், விக்கிரவாண்டி மற்றும் மரக்காணம் வட்டாரங்களில் 1000-1500 நபர்களும் விவசாயி தனி அடையாள எண் பெறாமல் உள்ளனர்.

எனவே, வருகிற நவம்பர் 7ம் தேதிக்குள் தங்களது நில உடைமை விவரங்கள், ஆதார், செல்போன் எண் ஆகிய விவரங்களுடன் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகத்துறை, பொது சேவை மையங்களை அணுகி விவசாய தனித்துவ அடையாள எண் பெற்று பயனடையலாம்.

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டமான பிஎம் கிசான் (PM-KISAN) திட்டம்

பிரதமரின் விவசாயிகளுக்கான கௌரவ நிதி உதவித் திட்டமான பிஎம் கிசான் (PM-KISAN) திட்டம் என்பது நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக 2019 பிப்ரவரியில் பிரதமரால் தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும். இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6,000/ -, மூன்று சம தவணைகளில் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடிப் பணப் பரிமாற்றம் முறையில் விடுவிக்கப்படுகிறது. பிஎம் கிசான் திட்டம் உலகின் மிகப்பெரிய நேரடிப் பணப்பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகும்.

 இடைத்தரகர்களின் தலையீடு இல்லாமல் திட்டத்தின் பலன்கள் நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகளையும் சென்றடைவதை இத்திட்டம் உறுதி செய்துள்ளது. இத்திட்டத்தில் மத்திய அரசு இதுவரை 17 தவணைகளில் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு ரூ. 3.24 லட்சம் கோடி ரூபாயை வழங்கியுள்ளது.

திட்டத்தின் செயல்பாட்டு வழிகாட்டுதல்களின்படி, திட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகளை அடையாளம் கண்டு சரிபார்க்க வேண்டியது மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பொறுப்பாகும். பிஎம் கிசான் இணையதளத்தில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், பயனாளிகளுக்கு நேரடிப் பணப் பரிமாற்றம் முறையில் நிதி வழங்கப்படுகிறது.

தகுதியான விவசாயிகள் யாரும் இத்திட்டத்திலிருந்து விடுபடவில்லை என்பதை உறுதி செய்வதற்காக வேளாண் அமைச்சகம் அடிக்கடி மாநில அரசுகளுடன் ஒருங்கிணைந்து செறிவூட்டல் இயக்கங்களை மேற்கொள்கிறது. சமீபத்திய நாடு தழுவிய செறிவூட்டல் இயக்கமாக, 15 நவம்பர் 2023 முதல், நடைபெற்ற விக்சித் பாரத் சங்கல்ப் யாத்திரையின்போது 1.0 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட்டனர்.

பிஎம் கிசான் திட்டத்தின் பதிவுச் சேவைகள் நாடு முழுவதும் உள்ள 5.0 லட்சத்துக்கும் மேற்பட்ட பொது சேவை மையங்களில் கிடைக்கின்றன. இதனால் விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் எளிதில் பதிவு செய்து கொள்ள முடியும். மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மை - விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.