2015ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கடலூர் மாவட்டத்தில் சுமார் 27 இலட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், பெரிய மாவட்டமாக இருப்பதால் அதிகாரிகளால் வளர்ச்சிப் பணிகளைச் சரிவர கண்காணிக்க முடியவில்லை என்றும், தலைமையிடமாக உள்ள கடலூருக்கு மாவட்டத்தின் கடைகோடி பகுதிகளில் இருந்து, செல்வதற்கு 120 கிலோ மீட்டர் தொலைவு உள்ளதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும் கூறி கடலூர் மாவட்டத்தைப் பிரித்து விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என்றும் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் விருத்தாசலம் மாவட்ட விழிப்புணர்வு இயக்க கூட்டம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் தங்க.தனவேல் தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தர்ராஜன், தமிழக வாழ்வுரிமை கட்சி நகர செயலாளர் பி.ஜி.சேகர், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை மாவட்ட செயலாளர் கதிர்காமன், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட விவசாய அணி தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 




இந்த கூட்டத்தில், தற்பொழுது நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் விருத்தாசலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும், அவ்வாறு அறிவிக்காவிட்டால் ஜனவரி மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  இதனை தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை உழவர் சந்தை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் அனைவரும் ஊர்வலமாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசனின் வீட்டிற்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் அமைச்சரின் மகன் வெங்கடேசிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். மேலும் கோட்டாட்சியர் ராம்குமாரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. 


இதனை தொடர்ந்து இதே கோரிக்கைைய வலியுறுத்தி விருத்தாசலம் பெரியார் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு சென்றனர் ஆனால் அங்கே சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன் இல்லாத காரணத்தினால் விழிப்புணர்வு இயக்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அங்கிருந்த அலுவலக உதவியாளரிடம்  மனு கொடுத்துவிட்டு, அனைவரும் கலைந்து சென்றனர். 


இந்த போராட்டத்தில் இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் கோகுல கிருஸ்டீபன், வர்த்தகர் சங்க நிர்வாகிகள் சர்தார் பாஷா, உசேன் பாஷா, விவசாயிகள் சங்கம் மதியழகன், பாலகிருஷ்ணன், அன்பழகன், தமிழ்நாடு இளைஞர் சங்கம் அய்யப்பன், பார்த்தசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். மேலும் கடந்த தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தற்பொழுதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விருத்தாச்சலம் வந்த பொழுது விருத்தாசலத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க கோரி கோரிக்கை வைத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.