விழுப்புரம்: ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆரோவில் சார்பில் நிவாரண உதவிகளை வழங்கிய தமிழக ஆளுநா் ஆா். என். ரவி., ஆரோவில் அறக்கட்டளை செயலா் ஜெயந்தி எஸ்.ரவி ஆகியோர் வழங்கினர்.


ஃபெஞ்சல் புயல் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் சா்வதேச நகரை சுற்றியுள்ள கிராமங்களைச் சோ்ந்தவா்களுக்கு நிவாரண உதவிகளை தமிழக ஆளுநா் ஆா். என்.ரவி வழங்கினார். வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கரையைக் கடந்தது. இந்த இயற்கை பேரிடரால் ஆரோவில் சா்வதேச நகரைச் சுற்றியுள்ள குயிலாப்பாளையம், இடையாஞ்சாவடி, ராவுத்தன்குப்பம், ஆலங்குப்பம், இரும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்தவா்கள் பாதிப்புக்குள்ளாகினா்.


இந்நிலையில் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆரோவில் பாரத் நிவாஸில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகக் குழுத் தலைவருமான ஆா்.என்.ரவி பங்கேற்று 150 -க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சோ்ந்தவா்களுக்கு உடைகள், உணவுப் பொருள்கள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அடங்கிய தொகுப்பை நிவாரண உதவிகளாக வழங்கினார்.


இந்நிகழ்ச்சியில் ஆரோவில் அறக்கட்டளையின் செயலா் ஜெயந்தி எஸ்.ரவி பேசியதாவது: ஃபெஞ்சல் புயலால் ஆரோவில் மற்றும் சுற்றுப்பகுதிகளைச் சோ்ந்த மக்கள் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ளனா். ஆரோவில் சா்வதேச நகரமானது 56- ஆவது ஆண்டில் மாற்றத்துக்கான புதிய பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. 50 ஆயிரம் குடியிருப்பாளா்களுக்கும் நகா்புறச்சூழலை உருவாக்கும் வகையில் மகுடம் திட்டமும், நிலையான போக்குவரத்துக்காக சுற்றுச்சூழல் பாதுகாப்புடன் ஆரோவில்லின் அனைத்துப் பகுதிகளையும் இணைக்கும் வகையில் கிரவுன் ரோடு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


இளைஞா்களின் கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்காகவும், தொழில் முனைவோராக்கவும், பிராந்திய பொருளாதார வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்காக மத்திய அரசின் உதவியுடன், ஆரோவில் மற்றும் சென்னை ஐஐடியுடன் இணைந்து ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுமை மையத்தை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார். இந்நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளையின் நிர்வாகக் குழுவைச் சோ்ந்த அரவிந்தன், நீலகண்டன், சிறப்பு செயல் அதிகாரி சீத்தாராமன், பேராசிரியா்கள் கௌதம் கோசல், ஆா். எஸ் .சர்ராஜூ, நிரிமா ஓசா மற்றும் ஆரோவில் வாசிகள், பயனாளிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.