விழுப்புரம்: தனது லெட்டர் பேடை போலியாக தயாரித்து அறிக்கை வெளியிடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி விழுப்புரம் ஆட்சியர் அலுவலக வாயிலில் உள்ள சாலையில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் தர்ணா போராட்டதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். 

 

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும் விழுப்புரம் மாவட்ட அதிமுக பொறுப்பாளருமாக உள்ள  சி.வி.சண்முகம் நடைபெற்று முடிந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளப்போவதாக தவறான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருவதாக விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.

எம்பி சிவி சண்முகம் பெயரில் போலியான அறிக்கை


இதே போன்று  விழுப்புரம் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் பாக்கியராஜ் போட்டியிடுவதில் தனக்கு விருப்பமில்லை என்றும், தன்னை கேட்காமல் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் பிரச்சாரங்கள் சிறுமைப்படுத்தி கழகத்திற்கு மாறாக வேட்பாளர் செயல்படுவதாக தன் பெயரில் போலியான அறிக்கையை மர்ம நபர்கள் தயார் செய்து சமூக வலைதளங்களில் பரப்புவதாகவும் புகார் அளித்திருந்தார்.

சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட சி.வி. சண்முகம்


இதுபோன்று 20க்கும் மேற்பட்ட புகார்கள் விழுப்புரம் சைபர் கிரைம் போலீசிலில் புகார் அளித்தும் தனது லெட்டர் பேடை போலியாக பயன்படுத்தியவர்களை கண்டுபிடிக்கவில்லை என்றும் தான் அளித்த புகார்கள் மீது வழக்கு பதிவு செய்யாமல் நடவடிக்கை எடுப்பதில்லை என விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சி.வி.சண்முகம் புகார் அளிக்க இன்று சென்றார். அப்போது விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் எஸ்.பி தீபக் சிவாஜ் இல்லை என்பதால் சிறிது நேரம் அமர்ந்திருந்த சிவி சண்முகம் அங்கிருந்து வெளியே வந்து விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக வாயிலில் உள்ள சாலையில் கட்சி நிர்வாகிகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் கைது


தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சி.வி.சண்முகத்திடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியர் அலுவலகம் முன்பாக அனுமதி இன்றி  போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என தெரிவித்த போதும்  போராட்டத்தை கைவிட மறுத்ததால் சிவி சண்முகத்தை போலீசார் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அதிமுக நிர்வாகிகள் சாலையில் படுத்து கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.