கடலூர் : சிதம்பரம் சேத்தியாதோப்பு சாலையில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் குடியிருப்பு பகுதி அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் உயிரிழந்தனர்.
மின்கம்பி அறுந்து விழுந்து மூவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சேத்தியாதோப்பு சாலையில் உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் மின்கம்பி அறுந்து விழுந்து மூன்று பேர் உயிரிழந்தனர். சாலையோரமாக இருந்த குடியிருப்பு பகுதி அருகே இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பி மீது விழுந்தது. தம்பதியான மரியசூசை, பேலோஸ் மேரி மற்றும் அவர்களது உறவினர் வனதாஸ் மேரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தொடர் மழை காரணமாக புளியமரம் வேரோடு முறிந்து குடியிருப்பு பகுதியில் மின்கம்பி மீது விழுந்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக நேற்று காலை மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இடி, மின்னலுடன் மழை
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று பல மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. தென் மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டம் ஒரத்தூர் காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சாத்தமங்கலம் அருகே இன்று காலை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சாலையோரம் நின்றிருந்த புளிய மரம் ஒன்று மின் கம்பி மீது விழுந்தது. மரம் விழுந்ததால், மின் கம்பி அறுந்து கீழே விழுந்ததில், அங்கே நின்று கொண்டிருந்த மரிய சூசை (70), பிலோஸ் மேரி (60), வனதாஸ் மேரி (70) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் விரைந்து வந்து பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.