கடலூர் அருகே நின்றிருந்த பள்ளிப் பேருந்து மீது லாரி மோதி விபத்தில்  நான்கு பள்ளி மாணவர்கள் காயமடைந்தனர்.

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள  மங்களூரில் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் பேருந்து பள்ளி மாணவ, மாணவிகளை இயற்றி வருவது வழக்கமான ஒன்று.

 

இந்நிலையில் கிராமங்களில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு கல்லூரில் பேருந்து நிறுத்தத்தில் மாணவர்களை ஏற்றி செல்வதற்காக தனியார் பள்ளி பேருந்து நின்று கொண்டிருந்த பொழுது  சென்னையிலிருந்து  திருச்சி நோக்கி சென்ற லாரி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த பள்ளி பேருந்தின் பின்புறத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.



 

இந்த விபத்தினால் தனியார் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியின் பேருந்து பின்பக்கம் முற்றிலுமாக சேதம் அடைந்தது. மேலும் பேருந்துக்குள் இருந்த 25 மாணவர்களும் அச்சத்தில் பலத்த சத்தத்தை எழுப்பினர். இதனால் அங்கு கூடிய பொதுமக்கள் பேருந்தில் இருந்த மாணவ, மாணவிகளை இறக்கியதோடு லாரி ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 

 லாரி மோதி பள்ளி பேருந்து விபத்துக்குள்ளானதில்  பேருந்தில் இருந்த மாணவர்கள் நான்கு பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது, காயமடைந்த நான்கு மாணவர்களையும் அப்பகுதி மக்கள் மீட்டு தொழுதூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் பேருந்தில் இருந்த மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இந்த விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

 

திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் முதல் ராமநத்தம் வரை அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால் நெடுஞ்சாலைத்துறையினர் விபத்தை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.