உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஓமிக்ரான் எனும் புதிய வகை உருமாறிய கொரோனா வேகமாக பரவி வருகிறது. அதனை தொடர்ந்து வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனாவும் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன, தமிழகத்திலும் இந்த வருடம் தொடங்கியது முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.

 

இதே போல் கடலூர் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து ஒற்றை இலக்கிலேயே இருந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, கடந்த 1 ஆம் தேதி வெறும் 5 நபர்கள் மட்டுமே பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் பத்து நாட்களில் பல மடங்கு உயர்ந்து, நோய் பரவல் வேகமெடுத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் 162 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது பின்னர் நேற்று முன்தினம் ஒரே நாளில் 128 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது இப்படி இருந்து வந்த சூழலில் கொரோனா பாதிப்பு 200 கடந்து நேற்று ஒரே நாளில் 206 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

 



 

இவர்களில் சென்னையில் இருந்து புவனகிரி வந்த ஒருவருக்கும், நோய்த்தொற்று அறிகுறிகளுடன் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு இருந்த 45 பேருக்கும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த 160 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. இது வரை மாவட்டத்தில் 65 ஆயிரத்து 297 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று வரை 63 ஆயிரத்து 807 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனர். நேற்று 17 பேர் குண மடைந்து வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது வரை கொரோனாவுக்கு 876 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டு 549 பேர் கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் தற்பொழுது சிகிச்சையில் உள்ளனர், 65 பேர் வெளி மாவட்ட அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதால் கடலூர் பெரியார் அரசு கலைக்கல்லூரியில் கொரோனா முதல் மற்றும் இரண்டாவது அலையின் போது தனிமைப்படுத்தும் மையமாக செயல்பட்ட வகுப்பறைகளை மீண்டும் தனிமைப்படுத்தும் மையமாக மாற்ற முடிவு செய்து, அனைத்து அறைகளும் நேற்று சுத்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டது.இதையடுத்து அங்கு சமூக இடைவெளியுடன் கட்டில்கள் போடப்பட்டுள்ளன. இந்த தனிமைப்படுத்தும் மையத்தில் மொத்தம் 120 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

 



 

நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட நிர்வாகம் கடுமையாக கடைபிடிக்க வேண்டும் எனவும், மேலும் பொதுமக்கள் முக கவசம் அணிய வேண்டும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். சானிடைசர் மூலம் கைகளை சுத்தம் செய்ய வேண்டும் போன்ற சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்களை முறையாக பின்பற்ற வேண்டும் ஆனால் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பெரும்பாலானோர் கடைபிடிக்க வில்லை என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.