விழுப்புரம்: பன்னீர்செல்வமும், குருமூர்த்தியும் சேர்ந்து அதிமுகவை அழிக்க நினைக்கிறார்கள். அதிமுக, திமுக இந்த இரண்டு கட்சிகளில் ஏதேனும் ஒன்றை அழிப்பது தான் குருமூர்த்தியின் நோக்கம் என விழுப்புரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் அனந்தபுரம் அடுத்த காரனை பெரிச்சானூர் கிராமத்தில் அதிமுகவின் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. திமுக அரசை கண்டித்து நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி.சண்முகம் பேசுகையில்.,
திமுக அரசுக்கு ஆயுள் ஆறு மாதம்தான் உள்ளது. நான்குமாதம் தான் ஸ்டாலின் கையெழுத்து போட முடியும். யார் நாட்டை ஆள வேண்டும் என்ற நேரம் நெருங்கி வருகிறது. ஆயிரம் ரூபாய், இலவச பேருந்து கொடுத்தோம் என திமுகவினர் கூறி வருகிறார்கள். பேருந்தில் பெண்கள் சென்றால் அவமானப் படுத்தப்படுகிறார்கள்.
பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. ஐந்து நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து முடித்துவிட்டது. ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையின் போதும் மூன்றாயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்போவதாக கூறினார்கள். ஆனால் 300 பேருந்துகள்கூட வாங்கவில்லை. 2021-ஆம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1500 ரூபாய் கொடுப்போம் என கூறினோம். தமிழ்நாட்டில் இரண்டு கோடியே, 24 லட்சம் குடும்ப அட்டை உள்ளது.
அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும். ஆனால் எல்லோருக்கும் கொடுக்கவில்லை. 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது ஆயிரம் ரூபாய் கொடுத்தார். தேர்தலில் அனைவருக்கும் என கூறிவிட்டு தற்போது தகுதி உள்ளவர்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் என கூறுகிறார். தற்போது தேர்தல் வரவுள்ளது என்பதால் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் கொண்டு வந்துள்ளார். மீண்டும் வெற்றி பெற உங்களுடன் ஸ்டாலின் திட்டம். அதிமுக ஆட்சிக்கு வந்தால் 1500, 2000 ஆயிரம் கொடுப்போம். இளையராஜாவுக்கு அரசு சார்பில் நூறு கோடி செலவு செய்து பாராட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆனால் சன் டிவி மட்டும் ஒளிபரப்பி பணம் சம்பாதிக்கிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என முதல்வரே கூறிக்கொள்கிறார். முதல்வர் அவருக்கு அவரே பாராட்டு விழா நடத்திக்கொள்கிறார்.
அவர் (பன்னீர்செல்வம்) என் வீட்டு வாசலில் ஏன் நிற்க வேண்டும். கலைஞர், ஸ்டாலின் வீட்டு வாசலில் தான் நிற்பார். பதவி கொடுத்தது அதிமுக, ஜெயலலிதா. ஆனால் ஸ்டாலினிடம் செல்கிறார். அவருக்கு (பன்னீர்செல்வம்) அதிமுகவினர் வீடெல்லாம் தெரியாது. நான் சாதாரண தொண்டன். பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக குருமூர்த்தி பேசுகிறார். பன்னீர்செல்வம், குருமூர்த்தியும் அதிமுக அழிய வேண்டும் என நினைப்பவர்கள். குருமூர்த்தி ஒரு அரசியல் வியாபாரி. அதிமுக, திமுக என்ற இரு கட்சிகளில் ஏதேனும் ஒன்றை அழிக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம். என்னை பற்றி பேச உனக்கு எந்த அருகதையும் இல்லை.
மீண்டும் தமிழகம் தலைநிமிற இரட்டை இலைக்கு வாக்களிக்க வேண்டும். அதிமுக, பாஜக கூட்டணி உள்ளது. விலைவாசி குறைக்க மோடி அரசு வரி சீர்த்திருத்தைத்தை கொண்டு வந்துள்ளது. கல்வி உபகரணங்கள், 33 உயிர் காக்கும் மருந்துகளுக்கு வரி இல்லை. பால் பொருட்களுக்கு வரி இல்லை. காய்கறிகளுக்கு வரி இல்லை. வீட்டிற்கு தேவையான அத்தியாவசிய பொருட்களுக்கு 18 சதவீதமாக இருந்த வரி ஐந்து சதவீதமாக குறைந்துள்ளது. இதனை செய்தது அதிமுக, பாஜக கூட்டணி. இவ்வாறு அவர் பேசினார்.