விழுப்புரம்: இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் அவமானம் தாங்காமல் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதால் தற்கொலைக்கு காரணமானவரக்ளை கைது செய்யக்கோரி உறவினர்கள் தாலுக்கா காவல் நிலையம் முற்றுகையிட்டும் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது. 

விழுப்புரம் அருகேயுள்ள பிடாகம் குச்சிப்பாளையத்தை சேர்ந்த இளைஞர் சஞ்சய் குமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 7 ஆம் தேதி விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நடைபெறும் கண்காட்சிக்கு சென்றுள்ளனர். அப்போது வழுதரெட்டியை சார்ந்த இளைஞர்கள் பாண்டியன், விஜய் உள்ளிட்ட ஐந்து இளைஞர்கள் வாட்டர் பாட்டிலால் சஞ்சய் உடன் வந்தவர்கள் மீது தாக்கி உள்ளனர். இதனால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியதால் விஜய் தனது 20 நண்பர்களை அழைத்து சஞ்சயை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதனால் காயமடைந்த சஞ்சய் விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரனை செய்து வழக்கு பதியாமல் இருந்த நிலையில் நேற்றைய தினம் சஞ்சய் தனது நண்பர்களிடத்தில் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள் எனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று தெரிவித்து மன உளைச்சலில் இருந்த இளைஞர் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து உடலை முண்டியம்பாக்கத்திலுள்ள அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் இன்று உடலை வாங்க மறுத்தும் தற்கொலைக்கு காரணமாணவர்கள் மீது விசாரணை செய்து வழக்கு பதியாமல் காலம் தாழ்த்தியதால் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறி தாலுக்கா காவல் நிலையத்தினை இறந்த இளைஞரின் உறவினர்கள் முற்றுகையிட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர்.

அதனை தொடர்ந்து விஜய் மற்றும் பாண்டியன் ஆகிய இரு இளைஞர்களை போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து இரு இளைஞர்களை கைது செய்தனர். அதன் பின்னர் இறந்த இளைஞரின் உறவினர்கள் குற்றவாளிகள் ஐந்து பேர் என்று கூறியும் ஐந்து பேரையும் கைது செய்யக்கோரி விழுப்புரம் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் காரணமாக வாகனங்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்றதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் ஏடிஎஸ்பி தினகரன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டு சென்றனர். இந்நிலையில் சஞ்சய் குமாரை தாக்கிய இளைஞரில் ஒருவர் கையில் வாள் கொண்டு ரீல்ஸ் செய்து வெளியிட்ட வீடியோ வெளியாகி உள்ளது. அதனை கொண்டு தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் குடும்பத்தில் ஏற்கனவே தந்தையும் சகோதரனும் தற்கொலை செய்து இறந்த நிலையில் கடைசியாக இருந்த இரண்டாவது மகன் சஞ்சய் குமாரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.