சித்ரா பெளர்ணமி 2025 : திருவண்ணாமலை சிறப்பு ரயில் இயக்கம்... முழு விவரம் உள்ளே !
சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

விழுப்புரம்: சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.
சித்திரை பௌர்ணமி
சித்திரை பௌர்ணமி எனப்படுவது சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தன்று சைவ மக்களால் கொண்டாடப்படும் ஒரு விரத நாளாகும். இந்த விழாவை எம லோகத்தில் பாவ புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்த நாயனாருக்காக கொண்டாடுகிறார்கள். அவர் தங்களின் பாவக் கணக்குகளைக் குறைத்து நற்கணக்குகளை அதிகமாக்குவார் என்பது நம்பிக்கையாகும். இந்நாளை சித்ர குப்தன் பிறந்தநாள் என்றும், சித்ர குப்தனின் திருமண நாள் என்றும் இருவேறு நம்பிக்கைகள் உள்ளன.
இந்நாளில் சைவர்கள் விரதமிருந்து கோயில்களிலும் ஏனைய புனித இடங்களிலும் கஞ்சி காய்ச்சி சித்திர புத்திரனார் கதை படித்து எல்லோருக்கும் கஞ்சி வார்ப்பர். இந்நாளில் முன்னோர் பொங்கல் வைத்துப் பூச்சொரிந்து குரவைக் கூத்தாடி வசந்த விழாவைக் கொண்டாடினர். காலப்போக்கில் இதை சிவனுடைய சிறப்பு விழாவாகக் கொண்டாடத் தொடங்கினர். தாய் உயிருடன் இல்லாத ஆண்கள் அனைவரும் காலையில் எழுந்து நீர்நிலைகளுக்குச் சென்று நீராடி இறந்த தாயாரை நினைத்து தர்ப்பணம் பண்ணுவர்.
சித்திரை பௌர்ணமி சிறப்பு ரயில் இயக்கம்
சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே திருச்சி கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூயிருப்பதாவது.,
சித்திரை பவுர்ணமியை முன்னிட்டு, விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது. வரும் 11, 12ம் தேதிகளில் காலை 9:25 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில் ( வண்டி எண் 06130) புறப்பட்டு, காலை 11:10 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்திற்கு சென்றடைகிறது.
அதேபோல், மறுமார்க்கத்தில் இரு நாட்களும், திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பகல் 12:40 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் (வண்டி எண் 06129) மதியம் 2:15 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்திற்கு வந்தடைகிறது.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் இரவு 9:15 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06131) இரவு 10:45 மணிக்கு திருவண்ணாமலைக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் 12, 13ம் தேதிகளில் அதிகாலை 3:30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06132) அதிகாலை 5:00 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
இந்த சிறப்பு ரயில்கள் வெங்கடேசபுரம், மாம்பழப்பட்டு, ஆயந்துார், திருக்கோவிலுார், ஆதிச்சனுார், அண்டம்பள்ளம், தண்டரை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷம்
சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியை சித்ரா பவுர்ணமியாக இந்துக்கள் கொண்டாடுகிறார்கள். மற்ற மாதங்களில் வரும் பவுர்ணமி நாட்கள் முருகன் மற்றும் சிவ பெருமானுக்குரிய வழிபாட்டு நாட்களாக கருதப்படுகின்றன. ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மட்டும் பூலோகத்தில் வசிக்கும் ஜீவராசிகளின் பாவ, புண்ணிய கணக்குகளை எமலோகத்தில் இருந்து எழுதிக் கொண்டிருக்கும் சித்ரகுப்தருக்குரிய வழிபாட்டு நாளாக கருதி வழிபடுவது வழக்கம்.
இந்த நாளில் பாவங்களை போக்கி, முக்தியை அளிக்கும் சிவ பெருமான் குடிகொண்டிருக்கும் முக்தி தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வது மிகவும் விசேஷமானதாகும். கிரிவலம் வருவதற்கு பல்வேறு மாவட்டம், மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள்





















