விழுப்புரம்: தமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருது
தமிழ்நாட்டில் சமுதாய வளர்ச்சிக்கு சிறப்பாக சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று "முதலமைச்சர் மாநில இளைஞர் விருது" வழங்கப்பட்டு வருகிறது.
15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.
இந்த விருது ரூ.100000/- ரொக்கம், பாராட்டுப் பத்திரம் மற்றும் பதக்கம் உள்ளடக்கியதாக இருக்கும்.
அதன்படி 2024-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் மாநில இளைஞர் விருது எதிர்வரும் 15.08.2025 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. எனவே இவ்விருதுகள் பெறுவது தொடர்பாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணைய தளமான www.sdat.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க 03.04.2025 முதல் கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும்.
முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கான விண்ணப்பிக்கும் தகுதிகள்:
- 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்/பெண் ஆகியோர் விண்ணப்பிக்கலாம். 01.04.2024 அன்று 15 வயது நிரம்பியவராகவும் மற்றும் 31.03.2025 அன்று 35 வயதுக்குள்ளாக இருத்தல் வேண்டும்.
- கடந்த நிதியாண்டில் (2024-2025) அதாவது 01.04.2024 முதல் 31.03.2025 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே கருத்தில் கொள்ளப்படும்.
- விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (சான்று இணைக்கப்பட வேண்டும்)
- விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும்.அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு. கண்டறியப்படக் கூடியதாகவும் அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.
- ஒன்றிய/மாநில அரசுகள், பொதுத் துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள்/கல்லூரிகள்/ பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது.
- விண்ணப்பதாரருக்கு உள்ளுர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.
இணைய தளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2025 அன்று மாலை 4.00 மணி ஆகும். மேற்கண்ட இவ்விருது தொடர்பாக இதர விபரங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் பெற்றுக்கொள்ளலாம் என விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.