விழுப்புரம்: 2019ம் ஆண்டு முதல் ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், அன்னதானம் வழங்குதல், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு குமார், முதல்வரிடம் இளைஞர் விருதை பெற்றார்.

Continues below advertisement

விழுப்புரம் இளைஞருக்கு முதலமைச்சரின் மாநில விருது!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த மேலக்கொந்தை கிராமத்தைச் சேர்ந்தவர் சந்துரு குமார், மனிதம் காப்போம் தொண்டு நிறுவன தலைவராக உள்ளார். இவர், கடந்த 2019ம் ஆண்டு முதல் ரத்த தானம், மரக்கன்றுகள் நடுதல், அன்னதானம் வழங்குதல், போதைக்கு எதிரான விழிப்புணர்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது சமூக சேவையை பாராட்டி, சென்னையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், தமிழக அரசின் சார்பில் முதல்வர் இளைஞர் விருது வழங்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின், விருது, ரூ. ஒரு லட்சம் ரொக்கப் பரிசு, பதக்கம், பாராட்டு சான்றிதழை சந்துரு குமாரிடம் வழங்கி கவுரவித்தார்.

மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சி சம்பவம்!

எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஓடோடி உழைத்த இளைஞர்களுக்கும் குழுவிற்கும் கிடைத்த ஓர் அங்கீகாரம் அளிக்கும் வகையில் தமிழக முதலமைச்சரே பாராட்டி விருது வழங்கியது மறக்க முடியாத ஒரு நெகிழ்ச்சி சம்பவம் என மனிதம் காப்போம் குழுவின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வட்டம் ஆர்.சி மேலக்கொந்தை கிராமத்தை சிவனேசன் - ரேவதி தம்பதியின் மகனான சந்துரு என்பவர் MBA, MSW படித்து முடித்துள்ளார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு விபத்தில் சிக்கிய நண்பரின் தாய்க்கு ரத்ததானம் செய்ததாக சந்தரு தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக மனிதம் காப்போம் என்ற தன்னார்வலர்கள் குழு ஒன்றை அமைத்து கிட்டதட்ட 6 ஆண்டுகளாக ரத்ததானம் செய்து வருவதாக அதன் நிறுவனர் சந்துரு தெரிவித்தார்.

இலவச ரத்ததான சேவை

விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி தமிழ்நாடு முழுவதுமாக எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் பல மக்களுக்கு இலவச ரத்ததான சேவையை செய்து வருவதாக தெரிவித்தார். குறிப்பாக அரிய வகை ரத்தமான பாம்பே ரத்த வகையை சேகரித்து ரயில் மற்றும் விமானம் மூலம் இந்தியா முழுவதும் அனுப்பி வைத்து வருவதாக சந்துரு பெருமிதம் தெரிவித்தார்.

6000-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்ததானம்

இதுவரை 6000-க்கும் மேற்பட்ட யூனிட் ரத்ததானம் செய்துள்ளனர் என்றும், 43 ரத்ததான முகாம்கள் நடத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 57 - க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் அரசுடன் இணைந்து போதை விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும், ரத்ததான முகாம் மட்டுமில்லாமல்,மரம் நடுதல், பனை விதை நடுதல், அன்னதானம் வழங்குதல், கல்வி உதவி செய்தல், பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு உதவி செய்தல் போன்ற பல உதவிகளை செய்து வருதாக சந்துரு வியக்க வைத்தார்.

இந்த குழுவையும், குழுவில் இடம்பெற்றுள்ளவர்களையும் அங்கீகரிக்கும் வகையில் தமிழக அரசு, மாவட்ட நிர்வாகம், தன்னாவலர்கள் குழு போன்றவர்கள் விருதுகளையும் பாராட்டு சான்றிதழ்களும் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இதுவரை 63க்கும் மேற்பட்ட பல விருதுகள் வாங்கியுள்ளதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

தமிழக அரசு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும்

இதுவரை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் உழைத்த உழைப்பிற்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாக தமிழக அரசு மூலம், "முதலமைச்சர் மாநில இளைஞர் விருதை" மனிதம் காப்போம் என்று குழுவின் நிறுவனரான சந்துருக்கு வழங்கப்பட்டது. இவ்விருது தமிழக அரசு சமூதாயத்தின் வளர்ச்சிக்கு உதவும் இளைஞர்களை கண்டறிந்து தருகின்ற விருதாகும்.

ரத்தம் கிடைக்காமல் எந்த ஒரு நபரும் இறக்கக் கூடாது!

மனிதம் காப்போம் குறித்து பேசிய சந்துரு, இந்த குழு மூலம், 30 முதல் 35 பேர் ரத்ததானம் செய்ய ஏற்பாடு செய்வோம் என தெரிவித்தார். அதிகபட்சமாக பி பாசிட்டிவ், ஓ பாசிடிவ் ரத்தம் தான் அதிகளவில் தேவை இருப்பதாகவும் அவர்கூறினார். புதுச்சேரி , விழுப்புரம் முண்டியம்பாக்கம் உள்ளிட்ட பல மருத்துவமனைகளில் ரத்ததானம் வழங்கி வருவதாகவும் சந்தரு தெரிவித்தார். ரத்தம் கிடைக்காமல் எந்த ஒரு நபரும் இறக்கக் கூடாது என்பதே தங்கள் குழுவின் ஒரே நோக்கம் என சந்தரு நெகிழ்ச்சி தெரிவித்தார்.

அந்த வகையில் பல்வேறு சிறப்பு முகாம்கள், ரத்த தானங்கள் முகாம்கள் என அனைத்தும் செய்து வருகிறோம் என்று தெரிவித்தார். இந்த நிறுவனம் 30 பேரை கொண்டு தொடங்கப்பட்ட நிலையில் தற்போது 500க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இந்த குழுவில் உள்ளதாக அவர் தெரிவித்தார். முதலமைச்சர் கையால் இந்த விருதை நானும் இந்த குழுவும் பெற்றது பெரிய பாக்கியம் கிடைத்துள்ளதாகவே நம்புவதாக நம்பிக்கை தெரிவித்தார். விருதோடு ஒருலட்சத்துக்கான காசோலையும் வழங்கப்பட்டது.

இந்த விருது தங்களின் உழைப்பிற்கு கிடைத்த முதல் அங்கீகாரம் என்று தெரிவித்தார். இதனை எங்கள் குழுவிற்கும், எங்களுக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் சமர்ப்பணம் செய்கிறோம் என்று தெரிவித்தார். இந்த விருது மூலம் கிடைத்த பணத்தை கண்டிப்பாக சமூக சேவைக்காக மட்டும் தான் பயன்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.

முடிந்த வரை உதவி செய்வோம்!

அதுமட்டுமல்லாமல் முடிந்த வரை மற்றவர்களுக்கு நிச்சயமாக உதவி செய்வோம். எங்கள் கிராமத்திலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் முயற்சிப்போம். "கடைசிவரை மனிதம் காப்போம்" என்று சந்துரு கூறினார். மேலும் இந்த குழுவைத் தொடர்பு கொள்ள விரும்பினால் தொலைபேசி எண்ணை 9003170726 தொடர்பு கொள்ளலாம்.