விழுப்புரம்: ஒன்றிய அரசு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழகத்தில் நுழைய ஏதேனும் வழி இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது என விழுப்புரத்தில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசினார்.

 

விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக சார்பில் செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் நடைபெற்ற இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் விழுப்புரம் மற்றும் வானூர் தொகுதிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் வனத்துறை அமைச்சர் பொன்முடி: 

 

தமிழ்நாட்டில் இந்தியை திணிக்கக் கூடாது என போராடியவர்கள் பல பேர். இந்தி திணிப்பை எதிர்த்து போராடிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாணவன் சுட்டுக் கொல்லப்பட்டார். இருமொழி கொள்கை குறித்து கிராமங்களில் எடுத்துக் கூற வேண்டும். இதனை செய்தாலே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏழு தொகுதிகளிலும் எதிர்த்து போட்டியிடுவார்கள் டெபாசிட் இழப்பார்கள் என்பது நிச்சயம். ஏழு தொகுதியில் வெற்றி பெற்று வெற்றியை ஸ்டாலின் கையில் ஒப்படைக்க வேண்டும்.

 

சமூக நீதி, சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய கொள்கைகளை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். திமுக இயக்கத்தின் கொள்கைகளை புரிய வைக்க வேண்டும். இப்போதிலிருந்து அந்தப் பணியை துவக்கிட வேண்டும். மும்மொழி கொள்கை வேண்டாம், இருமொழி கொள்கைதான் வேண்டும் என்பது மக்களுக்கு எடுத்து கூறி புரிய வைக்க வேண்டும். ஒன்றிய அரசு பல்வேறு சூழ்ச்சிகளை செய்து தமிழகத்தில் நுழைய ஏதேனும் வழி இருக்கிறதா என பார்த்துக் கொண்டிருக்கிறது. அதன தடுத்து நிறுத்த வேண்டிய கடமையும், பொறுப்பும் நம் அனைவருக்கும் உள்ளது. அனைவரும் ஒற்றுமையோடு செயல்பட வேண்டும்.

 

நமக்குள் வேறுபாடுகள் இருக்கலாம் அதனையெல்லாம் தூக்கி எறிந்து விட்டு 2026 தேர்தலில் ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும். ஒன்றிய அரசை எதிர்த்து தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறோம். இதனால் கல்விக்கு நிதி கொடுக்காமல் இருக்கிறார்கள் ஆனால் முதல்வர் ஸ்டாலின் பத்தாயிரம் கொடிய நிறுத்தினாலும் நாங்கள் இருமொழி கொள்கையை கைவிடமாட்டோம் என கூறியுள்ளார். எனவே முதல்வர் ஸ்டாலின் கரங்களை வலுப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.