விழுப்புரம்: போக்குவரத்து தொழிலாளர்கள் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக  வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் விழுப்புரம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் துண்டை விரித்து போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


இந்நிலையில் விழுப்புரம் பணிமனை முன்பாக போக்குவரத்து தொழிலாளர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பிலிம் சிட்டிக்கு ஏன் 540 கோடி ஒதுக்க வேண்டும், கார் ரேசுக்கு 450கோடி ஒதுக்கும் போது எங்கள் பணத்திற்கு நாங்கள் ஏன் கையேந்தி நிற்க வேண்டுமென கையில் பதாகை ஏந்தி  கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட வந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தியதை தொடர்ந்து பணிமனை வாயில் முன்பாக தரையில் அமர்ந்து துண்டை விரித்து போட்டு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமிழக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்கள் எதிர்ப்பினை தெரிவித்தனர்.


TN Bus Strike: தமிழ்நாட்டில் பொதுமக்கள் அச்சமின்றி பயணம் செய்ய ஏதுவாக உள்ளூர், வெளியூர் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”பேருந்து போக்குவரத்து சீராக உள்ளது”:

காபோக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் சார்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், ”தமிழ்நாடு முதலமைச்சர்,  பொது மக்கள் பாதுப்பாகவும், அச்சமின்றியும் பேருந்துகளில் பயணம் செய்ய ஏதுவாக, முழுமையாக பேருந்துகளை இயக்கிட உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், உள்ளூர் மற்றும் வெளியூர் செல்லும் பேருந்துகள் அனைத்து வழித்தடங்களிலும் 2-வது நாளாக இன்றும் (10.01.2024) முழுமையாக இயக்கப்பட்டு வருகிறது.

த.நா.அ.போ. கழகம் இயக்கப்பட வேண்டிய பேருந்துகள் இயக்கப்படும் பேருந்துகள் இயக்க சதவிகிதம்
மாநகர போக்குவரத்து கழகம் 3,233 3,210 99.29
அரசு விரைவு போக்குவரத்து கழகம் 89 89 100.00
விழுப்புரம் 2,359 2,278 96.57
சேலம் 1,249 1,222 97.84
கோயம்புத்தூர் 2,159 2,095 97.04
கும்பகோணம் 3,143 3,070 97.68
மதுரை 2,166 2,134 98.52
திருநெல்வேலி 1,630 1,624 99.63
மொத்தம் 16,028 15,722 98.09%

 

எனவே, பயணிகள் எந்தவித அச்சமின்றி, பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்ள அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும், அனைத்து போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள் பணியில் முழுமையாக ஈடுபட்டுள்ளனர். பேருந்துகள் இயக்கத்தினை அனைத்து போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து போக்குவரத்துக் கழக பணியாளர்கள் முழுமையாக கண்காணித்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்” என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.