விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சாலையோர விவசாய கிணற்றில் ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஆட்டோ கவிழ்ந்து விபத்து 


சென்னை நுங்கம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சிராஜ் - சத்யா தம்பதி தங்களது குடும்பத்தினர் 9 பேருடன் திருவண்ணாமலைக்கு கிரிவலம் சென்றிருந்தனர். திருவண்ணாமலையில் கிரிவலத்தை முடித்து விட்டு விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்துள்ள புலிவந்தி கிராமத்தில் உள்ள அவர்களுடைய குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். பின்னர் நள்ளிரவில் விழுப்புரம் கப்பை கிராமத்தில் உள்ள அவரது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஒன்பது பேரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்த நிலையில் அவர்கள் சென்ற ஆட்டோ நிலை தடுமாறி ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர கிணற்றில் கவிழ்ந்தது. இதில் அனைவரும் நீரில் மூழ்கினர். நான்கு பெண்கள் மற்றும் மூன்று ஆண்கள் நீரில் தத்தளித்து பின்னர் கிணற்றில் இருந்து கரையேறினர்.


சிறுவர்கள் இருவர் உயிரிழப்பு 


இதில் ஆட்டோ ஓட்டுநரின் மகன்கள் பிரகதீஸ்வரன், ஹரி பிரசாந்த் ஆகிய இருவரும் நீரில் மூழ்கினர். உடனடியாக தீயணைப்பு மீட்புப் குழுவினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் கிணற்றிற்குள் இறங்கி நடத்திய சுமார் 3 மணி நேர தேர்தலுக்குப் பிறகு இரண்டு சிறுவர்களின் உடல்களையும் இறந்த நிலையில் கைப்பற்றினர்.


பிரேத பரிசோதனை 


கைப்பற்றப்பட்ட உடல்கள் செஞ்சி அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து செஞ்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஆட்டோ விவசாய கிணற்றில் கவிழ்ந்து இரண்டு சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.