விழுப்புரம்: ஆரோவில் சர்வதேச நகரில் ரூ.40 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள கூடைப்பந்து மைதானத்தை ஆரோவில் அறக்கட்டளையின் செயலர் எஸ்.ஜெயந்தி ரவி திறந்து வைத்தார்.
ரூ.40 லட்சம் மதிப்பில் கூடைப்பந்து மைதானம்
ஆரோவில் என்பது ஒரு சர்வதேச நகரமாகும். இங்கு உலகம் முழுவதிலிருந்தும் வந்து 50,000 பேர் வசிக்கக்கூடிய நகரமாக இது திட்டமிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே, சர்வதேச நகரம் ஆரோவில் அமைந்துள்ளது. ஆரோவில் வாசிகள் மற்றும் சுற்றுப்புற கிராம இளைஞர்களிடையே விளையாட்டு திறமைகளை ஊக்குவிக்கும் விதமாக, ஆரோவில் அறக்கட்டளை சார்பில், குயிலாப்பாளையம் நியூ கிரேஷனில், 40 லட்சம் ரூபாய் செலவில் கூடைப்பந்து மைதானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. சுமார் 4,550 சதுர அடியில் 94 அடி நீளம், 50 அடி அகலத்தில் கூடைப்பந்து விளையாட்டு மைதானம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணி கடந்த 2018ம் ஆண்டு துவங்கியது.
தற்போது பணி முடிந்த நிலையில், மைதானம் திறப்பு நடந்தது. விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, கூடைப்பந்து மைதானத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து, ஆரோவில்லின் இளம் பெண்கள் அணியின் நட்பு கூடைப்பந்து போட்டியையும் அவர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அதிகாரி சீதாராமன், பாரத் நிவாஸ் அறங்காவலர் ஜென்ம ஜெய், நியூ கிரேஷன் பயிற்சியாளர் ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி பேசியதாவது, மாணவர்கள் பயன்பெறும் வகையில், ஆரோவில் சர்வதேச நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான கூடைப்பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இளைஞர்களுக்கு சர்வதேச தரத்திலான பயிற்சி கிடைக்கவேண்டும் என்பது தான் இதன் நோக்கமாகும், திறன் மிக்க பயிற்றுநர்களைக் கொண்டு இலவசமாக இங்கு பயிற்சியளிக்கப்படும் என்றார் அவர்.
ஆரோவில்லின் நோக்கம்
ஆரோவில்லின் நோக்கம் – மனிதஇன ஒற்றுமையை பரிசோதித்துப் பார்ப்பதற்காக இந்த இலட்சிய நகரம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 1930-ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே ஸ்ரீ அன்னைக்கு இத்தகைய நகரத்தை உருவாக்கவேண்டும் என தோன்றியது. 1960-ஆம் ஆண்டு மத்தியில் பாண்டிச்சேரி ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி இதுபோன்ற நகரத்தை உருவாக்கவேண்டும் என ஸ்ரீ அன்னையிடம் தெரிவித்தது. அதற்கு ஸ்ரீ அன்னை தம் ஆசீர்வாத்தை அளித்தார். பின்னர் இக்கருத்துரு இந்திய அரசாங்கத்தின் முன்வைக்கப்பட்டது, அதற்கு அது தனது ஆதரவை அளித்தது. மேலும், யுனெஸ்கோவின் பொதுசபைக்கு எடுத்து சென்றது. 1966-ஆம் ஆண்டு யுனெஸ்கோ எதிர்கால மனித சமுதாயத்திற்கு இது முக்கியமான திட்டம் என பாராட்டி ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்றி, இதற்கு தனது முழு ஆதரவையும் அளித்தது.
மனித இன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம்
வேற்றுமையில் மனித இன ஒற்றுமையை உருவாக்குவதே ஆரோவில்லின் நோக்கம் ஆகும். இன்றைக்கு ஆரோவில் மட்டுமே சர்வதேச அளவில் மனிதஇன ஒற்றுமை, ஜீவியத்தின் திருவுருமாற்றம் ஆகியவற்றின் பரிசோதனைக்குரிய முதல் மற்றும் ஒரே நகரமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிலையான வாழ்வு, எதிர்கால மனித குலத்திற்கு தேவையான பண்பாட்டு, சுற்றுச்சூழல், சமூக, ஆன்மிகத் தேவைகள் ஆகியவற்றில் அக்கறையுடன் நடைமுறையில் ஆராய்ச்சி செய்து வருகின்றது.
நகரத்தின் அமைதிப் பகுதி
நகரத்தின் மையப் பகுதி அமைதிப் பகுதியாகும். அதில் மாத்ரிமந்திர், அதன் தோட்டங்கள், ஆம்பித்தியேட்டர் ஆகியவை அமைந்துள்ளன. ஆம்பித்தியேட்டரில் மனிதஇன ஒற்றுமையின் அடையாளமாகத் திகழும் தாழியினுள் 121 நாடுகளில் இருந்தும், இந்தியாவின் 23 மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்பட்ட மண் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. சாந்தம் மற்றும் அமைதியான சூழலை ஏற்படுத்துவதற்கு உதவியாகவும், நிலத்தடி நீரை மீள்நிரப்பவும் ஒரு ஏரி இங்கு அமைந்து வருகிறது.