அதிமுக முன்னாள் எம்எல்ஏ வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை


தமிழகத்தில் முன்னாள் மற்றும் தற்போது உள்ள எம்எல்ஏக்கள் மற்றும் அமைச்சர்கள் பலர் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு, அவரது தந்தை ஐயப்பா, விழுப்புரத்தில் உள்ள அவரது சகோதரி வசந்தி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள். சில தினங்களுக்கு முன் பண்ருட்டி முன்னாள் அதிமுக எம்எல்ஏ சத்யா பன்னீர் செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்திய நிலையில், தற்போது பிரபு வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.


அமமுகவில் இணைந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தவர்


முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பத்து ரூபாய் இயக்கம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓம் பிரகாஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் கள்ளக்குறிச்சி முன்னாள் எம்எல்ஏ பிரபு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்துள்ளார் என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவுபடி சோதனை நடைபெற்று வருகிறது. முன்னாள் எம்எல்ஏ பிரபு அதிமுகவிலிருந்து விலகி அமமுகவில் இணைந்து, மீண்டும் அதிமுகவில் இணைந்தவர் என்பது குறிப்பிடதக்கது.


அரசியல் காழ்ப்புணர்ச்சி


இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து தனது X தளத்தில், கள்ளக்குறிச்சி தொகுதி கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பிரபு மீது, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, பழிவாங்கும் எண்ணத்தோடு லஞ்ச ஒழிப்புத் துறையை ஏவிவிட்டு சோதனை மேற்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் இச்செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.


இரவிலும் சோதனை 


முன்னாள் அதிமுக எம்எல்ஏ பிரபுவுக்கு நெருக்கமாக உள்ளவர்களின் 9 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை பல்வேறு இடங்களில் இரவு வரை தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலையில் காணப்பட்டது.