பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் ஜி.கே.மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் தைலாபுரத்தில் டாக்டர் ராமதாசை அன்புமணி ராமதாஸ் நேரில் சந்தித்தார். 


பின்னர் அவர் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில்...


இன்று தைலாபுரம் தோட்டத்தில் மருத்துவர் ஐயாவிடம் கட்சியின் வளர்ச்சி பற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலை பற்றி சித்திரை முழு நிலவு மாநாடு பற்றி போராட்டங்கள் பற்றி விவசாய மாநாடு பற்றி அடுத்த கட்டம் என்னென்ன போராட்டங்கள் எந்தெந்த பகுதியில் செய்யலாம் என இன்று குழுவாக விவாதிக்கப்பட்டது.


வரும் ஆண்டு எங்களுக்கு முக்கியமான ஆண்டு மக்கள் விரோத ஆட்சியை அகற்ற வேண்டும் என பொதுக்குழுவில் திருமணம் நிறைவேற்றினோம் அதற்கு ஏற்ப நடவடிக்கைகள் எல்லாம் எப்படி எடுக்க வேண்டும் 10.5 விழுக்காடு ஜாதி வாரி கணக்கெடுப்பு என்று ஐயா தலைமையில் விவாதிக்கப்பட்டது. 


எங்கள் கட்சி ஒரு ஜனநாயக கட்சி. காரசார விவாதம் நடைபெறும்.. உட்கட்சி பிரச்சனை குறித்து நீங்கள் பேச வேண்டாம் நாங்கள் பேசிக் கொள்வோம் என தெரிவித்து சந்திப்பை முடித்துக் கொண்டார்.


பாமக பொதுக்குழு கூட்டம்:


பாட்டாளி மக்கள் கட்சியின் "2024க்கு விடை கொடுப்போம் 2025 ஐ வரவேற்போம்" புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் தலைமையில் நேற்று நடைபெற்றது. முதலாவதாக பொதுக்குழு கூட்டத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கபட்டு, மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் தீர்மானம் வாசிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 


பொதுக்கூட்டத்தில் நிறைவாக பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தன் பேரன் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் சங்கத் தலைவராக அறிவித்து, அன்புமணிக்கு உதவியாக இருக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட அன்புமணி ராமதாஸ், “யார்... எனக்கா...?” என்றார். அதற்கு ராமதாஸ் “ஆமாம்” என்றார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு தொடங்கியது.


எனக்கெல்லாம் வேண்டாம்...


அப்போது அன்புமணி, "எனக்கெல்லாம் வேண்டாம்.. அவன் இப்போது தான் கட்சிக்கு வந்து நான்கு மாதம் ஆகிறது. உடனடியாக அவருக்கு இளைஞர் சங்கத் தலைவர் பொறுப்பு என்றால், அவனுக்கு என்ன அனுபவம் இருக்கு? நல்ல அனுபவசாலிக்கு அந்தப் பொறுப்பைக் கொடுங்கள். முகுந்தன் பரசுராமனுக்கு வேறு ஏதாவது பதவி கொடுங்கள். இப்போது பேசும்போது கூட நான் அதைத்தான் கூறினேன். களத்தில் நல்ல ஆட்கள், திறமையானவர்கள் வேண்டும் என்று பேசினேன். வந்த உடனே இளைஞர் சங்க பொறுப்பைக் கொடுத்துக்கிட்டு" என்று ஆவேசமாக பேசினார். உடனே கீழே இருந்த பாமக நிர்வாகிகள் முகுந்தனுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


மேடையிலேயே முற்றிய வாக்குவாதம் :


அதற்கு ராமதாஸ், “யாராக இருந்தாலும் நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். நான் சொல்வதைக் கேட்கவில்லையென்றால், யாரும் இந்தக் கட்சியில் இருக்க முடியாது. இது நான் உருவாக்கிய கட்சி. நான் சொல்வதைக் கேட்க முடியாவிட்டால், யாரும் இனி இந்த கட்சியில இருக்க முடியாது, என்றார். அதற்கு அன்புமணி, “அது சரி” என்றார். அப்போது ராமதாஸ், 'என்ன சரி, சரி என்றால் போ அப்போ' என்றார்.


பனையூரில் என்னை வந்து பார்க்கலாம் 


பின்னர் மருத்துவர் ராமதாஸ், முகுந்தனை பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்படுகிறார்,” என்று அறிவித்தார். அதற்கு அன்புமணி, “குடும்பத்தில் இருந்து இன்னொருவரை தூக்கிப் போடுங்கள்,” என்று கூறி, கையில் இருந்த மைக்கை மேஜை மீது எறிந்தார். பின்னர் பேசிய அவர், சென்னை பனையூரில், மூன்றாவது தெருவில் நான் புதிதாக அலுவலகம் ஒன்றை ஆரம்பித்துள்ளேன். அங்கு வந்து அனைவரும் என்னைப் பார்க்கலாம்” என்று கூறி தொலைப்பேசி எண்ணை அறிவித்து, இந்த எண்ணை குறித்து கொள்ளுங்கள், என்னைத் தொடர்பு கொண்டு அனைவரும் வந்து எப்போது வேண்டும் என்றாலும், என்னை வந்து பார்க்கலாம் என தெரிவித்தார்.


அதற்குள் இடையில் மருத்துவர் ராமதாஸ், மீண்டும் கூறுகிறேன்..உங்களுடைய இளைஞர் சங்கத் தலைவர் முகுந்தன் பரசுராமன். இன்னொரு அலுவலுவகம் கூட திறந்து நடத்திக்கொள். முகுந்தன் உனக்கு உதவியாக இருக்கப்போகிறார். இதை யாரும் மாற்ற முடியாது. உனக்கு விருப்பம் இல்லையென்றால், அதற்கு வேறு ஒன்றும் நான் சொல்ல முடியாது என்றார். அப்போது கூட்டத்தில் இருந்தவர்கள் எழுந்து சலசலப்பில் ஈடுபட்டனர். அதற்கு ராமதாஸ், நான் சொல்வதைத்தான் கேட்க வேண்டும். இது நான் ஆரம்பித்த கட்சி. நான் என்ன சொல்கிறேனோ அதைத்தான் அனைவரும் கேட்க வேண்டும். அப்படி விருப்பம் இல்லாதவர்கள் விலகிக்கொள்ளுங்கள். விருப்பம் இல்லாதவர்கள், என் பேச்சைக் கேட்காதவர்கள் கட்சியிலிருந்து விலகிக் கொள்ளலாம் என்றார், 


தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை சந்தித்தார் பாமக தலைவர் அன்புமணி


பாமக பொதுக்குழு கூட்டத்தில் ஏற்பட்ட சலசலப்பால் நேற்று மாலை ஜி. கே மணி தலைமையிலான குழு சென்னையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து சமாதானம் பேசிய நிலையில் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாசை பாமக தலைவர் அன்புமணி சந்தித்தார். 


அனைத்து பொறுப்புகளில் இருந்தும் முகுந்தன் விலக உள்ளதாக தகவல்


பாமக இளைஞரணி தலைவர் பொறுப்பு நேற்று மருத்துவர் ராமதாஸ் முகுந்தனுக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த பொறுப்பில் இருந்து தற்போது விலகிக் கொள்வதாக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கட்சி நிர்வாகிகள் மத்தியில் தனக்கு ஆதரவு இல்லை என்பதை உணர்ந்த முகுந்தன் தாமாகவே இந்த முடிவு எடுத்துள்ளதாகவும் மேலும் ஏற்கனவே வகித்து வந்த மாநில ஊடகப் பேரவை செயலாளர் பதவி உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகிக் கொள்வதாக தகவல் வெளியாகி உள்ளது.