கடலூர் தென்பெண்ணை மற்றும் கேடிலம் ஆற்றில் கடந்த மாதம் 19 மற்றும் 20ஆம் தேதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பெருவெள்ளம் கடலூர், பண்ருட்டி, மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போது வெள்ளம் வடிந்தாலும், அதனால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கவில்லை. அந்த அளவிற்கு தென்பெண்ணை மற்றும் கெடிலம் ஆற்று வெள்ளம் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டு சென்றுள்ளது. விளைநிலங்களுக்குள் புகுந்து கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தால் விவசாயிகள் சாகுபடி செய்திருந்த நெல், மக்காச்சோளம், உளுந்து உள்ளிட்ட பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. மேலும் ஏராளமான மின்கம்பங்களும் வெள்ளத்தின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் விளை நிலங்களில் சாய்ந்தன.
அந்த வகையில் கடலூர் அருகே உச்சிமேடு, நாணமேடு பகுதியில் உள்ள விளை நிலங்களில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தால் அந்த பகுதி விவசாயிகள் சாகுபடி செய்திருந்த பயிர்கள் அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. மேலும் திரும்பிய பக்கமெல்லாம் விளைநிலங்கள் முழுவதும் மணல் பரவி, மணல் மேடாக மாறின. அதாவது சுமார் 400 ஏக்கர் பரப்பளவிலான விளை நிலங்களில் ஒரு அடி முதல் 2 அடி உயரம் வரை மணல் புகுந்து, மண்மேடாக காணப்பட்டது.
இதனால் விளைநிலங்களில் படிந்த மண் மேடுகளை அகற்றி, சமப்படுத்தி தரும்படி உச்சிமேடு, நாணமேடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் வேளாண் துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் கண்துடைப்புக்காக பொக்லைன் எந்திரம் மூலம் சுமார் 10 ஏக்கர் நிலங்களை மட்டுமே சமப்படுத்தினர். மீதம் உள்ள விளைநிலங்களை சமப்படுத்த எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் வேறு வழியின்றி தங்கள் சொந்த செலவிலேயே விளைநிலங்களை சமப்படுத்த முடிவு செய்தனர். அதன்படி உச்சிமேடு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பெரும் செலவு செய்து, பொக்லைன் எந்திரம் மூலம் மேடு, பள்ளமாக காணப்பட்ட விளைநிலங்களை சமப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்பெண்ணையாற்று வெள்ளத்தால் எங்கள் பகுதி விளைநிலங்களுக்குள் பெருமளவில் மணல் புகுந்து, நிலமே தெரியாத அளவிற்கு பாலைவனம் போல் காணப்பட்டது. மேலும் சில விளைநிலங்கள் மேடு பள்ளமாக மாறியது. இதனால் நிலத்தை சமப்படுத்தி தரும்படி அதிகாரிகளிடம் மனு அளித்தோம். ஆனால் அவர்கள் ஒரு நாள் மட்டுமே சமப்படுத்தும் பணியில் ஈடுபட்ட நிலையில், அதன் பிறகு கண்டுகொள்ளவில்லை. இதனால் நாங்கள் எங்களது சொந்த செலவில் ஒரு மணி நேரத்திற்கு 900 கொடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் விளைநிலங்களில் காணப்படும் மண்மேடுகளை சமப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளோம் என்று வேதனை தெரிவித்தனர்.