விழுப்புரம்: திண்டிவனத்தில் பாதாள சாக்கடை திட்டப் பணியின் போது மண்ணில் புதைந்த வடமாநில இளைஞர் உயிரிழந்தார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு பகுதியாக இன்று திண்டிவனம் ரொட்டிகார தெருவில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு நான்கு வட மாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அதில் மூன்று பேர் பள்ளத்தின் மேல் இருந்து கொண்டு ஜல்லியை அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பள்ளத்தில் கீழே இருந்த மற்றொரு வட மாநில இளைஞரான சிராஜ் பீஞ்ச் என்பவர் ஜல்லியை வாங்கி கீழே கொட்டிக் கொண்டிருக்கும் போது திடீரென்று பக்கவாட்டில் இருந்த மண் சரிந்ததில் முற்றிலுமாக வடமாநில இளைஞர் மண்ணில் புதைந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தனர். பின்னர் ஜேசிபி எந்திரம் கொண்டு சுமார் ஒரு மணி நேரம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு பின் அவரை மண் புதையலில் இருந்து மீட்டு வெளியே எடுத்தனர். பின்பு 108 ஆம்புலன்ஸ் மூலமாக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பாதாள சாக்கடை திட்டத்தின் பொழுது வடமாநில இளைஞர் ஒருவர் மண்ணில் புதைந்து பலியான சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், திண்டிவனத்தில் பாதாள சாக்கடைக்கு பள்ளம் தோண்டும்போது மேற்குவங்க தொழிலாளி சிராஜ் மிஞ்ச் ( Siraj Minj) என்பவர் புதையுண்டு உயிரிழந்தவருக்கு முதலமைச்சர் அவர்கள் இறந்தவரின் குடும்பத்துக்கு 20 லட்சம் நிவாரணம் வழங்கவேண்டும் எனவும் மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயர் தொழிலாளர் சட்டம், 1979 (‘ISMA’) தற்போது தொழில் பாதுகாப்பு, சுகாதாரம், வேலை நிலைமைகள் (OSH) 2020 என்ற சட்டதொகுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கவேண்டும் என விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்