விழுப்புரம்: விழுப்புரம் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர் மற்றும் செவிலியர் சரியாக பணிக்கு  வராததால் மருத்துவமனை காவலாளி நோயாளிக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நோயாளிக்கு ஊசி போடும் காவலாளி:


விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் அருகேயுள்ள வீரபாண்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செவிலியர்கள், மருத்துவர்கள் சரியாக வருவதில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேர காவலாளியாக பணி புரிந்து வரும் தேவேந்திரன் என்பவர் நோயாளிக்கு ஊசி போடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.


இந்நிலையில் காவலாளி தேவேந்திரன் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு பகல் மற்றும் இரவு நேரங்களில் ஊசி  போடுவதும், ஒரு சில நேரங்களில் கர்ப்பிணிகளுக்கு பிரசவம் பார்ப்பதாகவும் தற்பொழுது புகார் எழுந்துள்ளது.


மக்கள் அதிர்ச்சி:


மருத்துவர் எங்கே சென்றார் என்று கேட்டால் வந்துவிடுவார். நான் தான் ஊசி போடுவேன் என தெரிவிப்பதாகவும் சில நேரங்களில் நோயாளிகளுக்கு ஊசி போட்டுவிட்டு பணம்  பெறுவதாகும் புகார் எழுந்துள்ளது. மருத்துவமனை காவலர்  தேவேந்திரன் நோயாளிகளுக்கு ஊசி போடும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


முன்னதாக, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் காயமடைந்த நோயாளிக்கு, துப்புரவு பணியாளர் ஒருவர் தையல் போட்டு சிகிச்சை அளிக்கும் காட்சி சமூக ஊடகங்களில் வைரலானது. இதைத் தொடர்ந்து,  சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து இணை இயக்குனர் மருத்துவ பணிகள் பிரேமலதா உத்தரவிட்டார். தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு மருத்துவமனைக்கு செல்ல அச்சத்தில் உள்ளனர்.


பணி நீக்கம் : 


இதுகுறித்த ABP நாடு செய்தி வெளியிட்ட நிலையில் நோயாளிகளுக்கு ஊசி செலுத்திய இரவு நேர காவலாளி தேவேந்திரனை பணி நீக்கம் செய்து விழுப்புரம் மாவட்ட சுகாதார நலப்பணிகள் துணை இயக்குநர் செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், வீரபாண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.