விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் மொத்த எண்ணிக்கை 6 ஆக இருந்த நிலையில் தற்போது நல்லாமூர், கூட்டேரிப்பட்டு, கீழ்எடையாளம், கன்னிகாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஆனால் இப்பள்ளியில் ஒரே ஒரு வகுப்பறை மட்டும்தான் உள்ளது.


அந்த ஒரே வகுப்பறையில் 54 மாணவ, மாணவிகள் கல்வி கற்கும் அவல நிலை உள்ளதால் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் வகுப்பறையிலும், நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள்  பக்கத்து வீட்டில் உள்ள மாட்டுக்கொட்டகைகளிலும், குடியிருப்புகளிலும், வீட்டின் வளாகங்களிலும் அமர்ந்து கல்வி பயின்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும் கிடையாது. சமையல் கூடம் இல்லாததால் சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமையல் செய்து தருகின்றனர். இதுதவிர விளையாட்டு மைதானம், கழிப்பிட வசதி இப்படி எந்தவொரு அடிப்படை வசதிகளும் இப்பள்ளியில் இல்லை.




இப்படி பட்ட அவல நிலையிலும் இப்பள்ளியில் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி தரத்திற்கு எந்த  குறையுமில்லை இங்கு கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அரசு ஆசிரியர்கள் இரண்டு பேர், பள்ளி மேலாண்மை குழு சார்பில் இரண்டு ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்கள் இரண்டு பேர் என மொத்தம் ஆறு ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளுக்கு முறையாக கல்வி பயிற்றுவித்து வருகின்றனர். பள்ளிக்கு அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பள்ளி கட்டிடத்தை கட்டித்தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்,




அந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் புறம்போக்கு நிலம் உள்ளதாகவும், அங்கும் பள்ளி அமைக்க அனைத்து வசதிகளும் உள்ளதாகவும் ஆனால் இதுவரை பள்ளிக்கல்வித்துறை சார்பிலோ அல்லது மாவட்ட நிர்வாகம் சார்பிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது பெரும் குற்றச்சாட்டாக உள்ளது. கல்வித்தரத்தில் உயர்ந்து நிற்கும் பள்ளிக்கு கட்டிடம் வசதி இல்லாதது மிகப்பெரிய குறையாக உள்ளது. பள்ளிக்கல்வித்துறையில் அதிகம் கவனம் செலுத்தி வரும் திமுக அரசு இந்த பள்ளிக்கு கட்டிடம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர்.






இது குறித்த செய்தி தொகுப்பு ABP நாடு செய்தியில் வெளியாகியது. இந்த நிலையில் செய்தி எதிரொலியாக அப்பள்ளியில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். புதிய கட்டிட வசதி கட்டுவதற்கு திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 19 லட்சம் நிதி  ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டார். மேலும் இந்த பள்ளி கட்டுவதற்கான இடங்களை தேர்வு செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இது குறித்து திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் அர்ஜுனன் செய்திகள் சந்திப்பில் கூறியதாவது:- கன்னிகாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் இட வசதி இல்லாததன் காரணமாக மாட்டு கொட்டகைகள் அமர்ந்து படிப்பதை ஊடகம் வாயிலாக அறிந்தேன். உடனடியாக  பள்ளிக்கு நேரடியாக வந்து ஆய்வு மேற்கொண்டு சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து அதற்கான ஒப்பந்த புள்ளிகளும் முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் பள்ளி கட்டுவதற்காக இடம் தேர்வு செய்யப்பட்ட பிறகு பூமி பூஜை உடன் பள்ளி அமைக்கும் பணி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.