அதி தீவிர புயலாக மாறிய யாஸ் ஒடிசா - மேற்கு வங்கம் இடையே இன்று கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கிழக்கு மத்திய வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த ஆழ்ந்த  காற்றழுத்த தாழ்வு மண்டலம். யாஸ் புயலாக நேற்று முன்தினம் மாறியது. இந்தப் புயல் மேலும் வலுவடைந்து இன்று நேற்று காலை தீவிர புயலானது. இந்நிலையில், யாஸ் அதி தீவிர புயலாக மாறியதாகவும், பாரதீப்புக்கும் (ஒடிசா) - சாகர் தீவுக்கும் (மேற்கு வங்கம்) இடையே இன்று கரையை கடக்கிறது என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. மணிக்கு 15 கிலோ மீட்டர் வேகத்தில் நகரும் யாஸ் புயல் பிற்பகலில் தம்ரா துறைமுகம் அருகே கரையை கடப்பதாகவும், புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 180 கிலோ மீட்டர் வரை காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. இந்தப் புயலின் காரணமாக  மேற்கு வங்கம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் நேற்று மஞ்சள் அலார்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.




யாஸ் புயலின் காரணமாக ஒடிசாவின் கேந்திராபாரா உள்ளிட்ட பல மாவட்டங்களில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஒடிசா மாநில கடலோர பகுதியில் அமைந்துள்ள 4 மாவட்டங்கள் பலத்த மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின. அந்த மாவட்டங்கள் அதிக சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ள பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. தாம்ரா துறைமுகத்தை சுற்றிலும் 40 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு, அபாயம் நிறைந்த பகுதியாக கருதப்படுகிறது. 


மேற்குவங்கத்தில் யாஸ் புயலின் பாதிப்பு அதிகம் ஏற்படலாம் என்று கணிக்கப்பட்டுள்ள 14 மாவட்டங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியாக அமைந்துள்ள அந்த 14 மாவட்டங்களில் இருந்து இதுவரை 8 லட்சத்து 9 ஆயிரத்து 830 பேர் பாதுகாப்பான இடங்கள் மற்றும் நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் கூறியுள்ளனர். 


யாஸ் புயல் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல நகரங்களில் இருந்து செல்லும் ரயில்களின் சேவையை வரும் 29ஆம் தேதி வரை கிழக்கு ரயில்வே ரத்து செய்துள்ளது.


முன்னதாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்திய விமானப்படை, 15 விமானங்களில் 950 தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவுக்கு அனுப்பப்பட்டனர். மேலும், 16 விமானங்கள், 26 ஹெலிகாப்டர்கள் உடனடி தேவைக்காகவும், கிழக்குக் கடற்படை மற்றும் அந்தமான் நிக்கோபார் கடற்படையைச் சேர்ந்த 8 கப்பல்கள், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காகவும் தயார் நிலையில் உள்ளன. தமிழகத்திலும் இப்புயல் எதிர்பாராத விதமாக சிற்சில சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் குடியிருப்பு பகுதிகளிக்குள் கடல் நீர் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது.