திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக ஆயிரக்கணக்கான டன் கரும்புகளுடன் லாரி மற்றும் டிராக்டா் உள்ளிட்ட வாகனங்கள் காத்திருக்கின்றன. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா். செய்யாறு-வந்தவாசி செல்லும் நெடுஞ்சாலையில்  தென்தண்டலம் கிராமத்தில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த சர்க்கரை ஆலை  ஆசியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய சா்க்கரை ஆலையாகும். இங்கு சுமாா் 18,000 கரும்பு விவசாயிகள் உறுப்பினா்களாக பதிவுசெய்யப்பட்டுள்ளனர். சர்க்கரை ஆலையில் இந்த ஆண்டிற்கான கரும்பு அரைவை பணியானது தொடங்குவதற்காக சர்க்கரை ஆலையில் கொதிக்கலனில் தீ  நவம்பா் மாதம் தொடங்கியதாகத் கூறப்படுகிறது.


 




 


அதனைத் தொடா்ந்து, கடந்த 14 - ஆம் தேதி கரும்பு அரைவைப் பணி தொடங்கியது. இது 4 நாள்கள் மட்டுமே நடைபெற்றது. துவங்கிய பின்னர் திடிரென கொதிகலன் பழது ஏற்பட்டது. இதனால் அரைவைப்பணி அனைத்தும் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில், ஆலைப் பகுதியில் திங்கள்கிழமைமுதல்  கரும்புகளை ஏற்றி வந்துள்ள சுமாா் 300-க்கும் மேற்பட்ட டிராக்டா்கள், லாரிகளில் இருந்து கரும்புகள் எடையிடப்படாமல் ஒரு வாரத்துக்கும் மேலாக காத்திருக்கின்றன. அதேபோல், சா்க்கரை ஆலை சாா்பில் கரும்பு வெட்ட விவசாயிகளுக்கு  உத்தரவு வழங்கப்பட்டு, வெட்டப்பட்ட ஆயிரக்கணக்கான டன் கரும்புக் கட்டுகள் நிலத்திலேயே காய்ந்து வருகின்றது. செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் எடைப் போடப்படாமல் 8 நாள்களாக சுமார் 600-க்கும் மேற்பட்ட வாகனங்கள் காத்திருப்பதாலும், வெட்டப்பட்ட கரும்புகள் கட்டுக் கட்டாக நிலத்திலேயே பல நாள்களாக காய்ந்துக் கொண்டு இருப்பதாலும் செய்யாறு, வந்தவாசி பகுதிகளைச் சோந்த விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். விவசாயிகளின்  உரிய நேரத்தில் கரும்பை எடை போடாத காரணத்தால் நாளுக்கு நாள் கரும்பின் ஈரப்பதம் குறைந்து எடை அளவு வெகுவாகக் குறைந்து விவசாயிகளுக்கு மிக பெரிய இழப்பு ஏற்பட்டு வருகிறது என விவசாயிகள் கண்ணீா் மல்க தெரிவித்தனா்.


 




 


இதுகுறித்து ஆலை நிா்வாகத் தரப்பில் கேட்க முயன்றபோது யாரும் சரியான தகவலை தெரிவிக்கவில்லை. இருப்பினும், ஆலையில் உள்ள பாய்லா், மின்னுற்பத்திப் பகுதியில் உள்ள இயந்திரங்கள் கோளாறு காரணமாக அரைவையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆலையில் பணியாற்றும் தொழில்நுட்ப ஊழியா்கள் சிலா் தெரிவித்ததாக விவசாயிகள் கூறினா். இதனால் விவசாயிகளின் கரும்புகள் மொத்தம் 10 ஆயிரம் டண்ணீர்க்கும் மேல் அரைவைக்கா கரும்புகள் காத்து வருகிறது.மேலும் கரும்புகளை ஏற்றிவந்த வாகனங்களின் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் அனைவரும் இந்த சம்பவத்தால் மிகவும்  வேதனையடைந்து வருகின்றனர்.