திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் கிராமத்தில் மயான பாதை தொடர்பாக இரு பிரிவினரிடையே கடந்தாண்டு ஜனவரி மாதம் மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் கலவரமாக மாறியது. பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகள் அடித்து சூறையாடப்பட்டன. வீடுகள், வாகனங்கள், வீட்டில் இருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது. இந்த கலவரத்தால் பட்டியலின மக்கள் காயமடைந்தனர். இதனால் வீரளூர் கிராமத்திற்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. மேலும் சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து அமைதியை கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உரிய நிவாரணம் அளிக்க வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் பிறகு அரசு சார்பில் ரூபாய் 62 லட்சம் மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டன.


 




இந்நிலையில், அதைத் தொடர்ந்து தற்போது வீரளூர் அருந்ததியே காலனி பகுதியை சேர்ந்த மக்கள் சார்பில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட நிவாரண தொகை போதுமானதாக இல்லை எனவும், முறையாக பட்டியலின மக்கள் அனைவருக்கும் சென்றடையவில்லை என சமூக நீதி மற்றும் மனித உரிமை ஆணையத்துக்கு பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 4-ம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தது, அவர்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில், வீரளூர் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதிகளில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய ஐஜி பிரபாகரன் ஆய்வு செய்தார். மயானம், மயான பாதை மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை பார்வையிட்டார்.


 




மேலும் , ஐஜி பிரபாகரன் பாதிக்கப்பட்ட பட்டியலின மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை என்றும் உதவிகளை பெற கையுட்டு கேட்கப்படுவதாகவும் , தங்களுக்கு உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றனர். பின்னர், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஆணைய ஐஜி பிரபாகரன் கூறும்போது, பாதிக்கப்பட்ட மக்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கப்படும் என்றும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தடையின்றி அரசின் நிவாரண உதவிகள் கிடைக்கும் என்றார். ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.