திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் கிராமிய காவல் நிலையத்தின் உள்ளே VIP கார் ஒன்று நுழைந்தது. காரில் இருந்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மனைவி கவிதா மற்றும் அவரது மகன் குகவேல் (ஒன்றாம் வகுப்பு படிக்கும் சிறுவன்) ஆகியோர் காரை விட்டு இறங்கினர்.

 

அப்போது குகவேல் கையில் துணி பை ஒன்று இருந்தது. அதனை எடுத்துக்கொண்டு தாலுக்கா காவல் நிலையம் உள்ளே சென்று அங்கு பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரூபி என்பவரிடம் உங்களை நான் பார்த்து இருக்கேன், உங்களை எனக்கு தெரியும் நீங்கள் பணி செய்யும் போது உங்களை பார்த்திருக்கிறேன். 

 

நீங்கள் ஒரு நாள் மழைக்காலத்தில் குடை பிடித்து அயராது பணி செய்ததை கண்டு அப்போது முடிவு செய்து உங்களுக்கு நல்ல ரெயின் கோட் பரிசளிக்க வேண்டும் என்று நினைத்தேன். 

 

நான் ரெயின் கோட் வாங்கி வந்து பார்த்தபோது நீங்கள் அந்தப் பணியில் இல்லை. எனது அப்பா பாஸ்கர பாண்டியன் திருவண்ணாமலைக்கு பணி மாறுதல் காரணமாக சென்றதால் உங்களுக்கு இந்த பரிசை அளிக்க முடியுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. 

 

அதனால் நீங்கள் இருக்கும் இடத்தை கண்டு இந்த பரிசை வழங்க வந்தேன் என்று கூறினார். அப்போது காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரூபி அன்போடு அந்த பரிசை பெற்றுக் கொண்டு அதனை குகவேல் முன்பாக திறந்து பார்த்த போது ரூபிக்கு பிடித்த நிறத்தில் ரெயின் கோட் கொடுத்துள்ளார். 

 

அதனை குகவேல் முன்பாக அணிந்து காட்டினார். அதனை கண்டு மாணவன் குகவெல் நெகிழ்ச்சி அடைந்தார்.



 

 இதுகுறித்து காவல் சிறப்பு உதவியாளர் ரூபி கூறுகையில்... 

 

நான் கடந்த மூன்று ஆண்டுகளாக போக்குவரத்து உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தேன். அப்போது ஒரு நாள் மழையின் காரணமாக குடை பிடித்தப்படி பணியாற்றினேன். அதனை மாவட்ட ஆட்சியரின் மகன் குகவேல் கவனித்துள்ளார்.

 

கவனித்ததோடு மட்டுமல்லாமல் அப்போதே பரிசளிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அதன் பிறகு அவரது தாயார் உதவியோடு எனக்கு பரிசு அளித்தார். 

 

சிறுவர்களும் காவல் பணியை உற்று கவனிப்பார்கள் என்று எனக்கு தெரியவில்லை  அப்படி கவனித்து எனக்கு பரிசளித்துள்ளார். இந்த பரிசானது ஜனாதிபதி அவார்ட் வாங்கியது போல இருக்கிறது இந்த பரிசை பெற்ற பின்னர் மேலும் தனது பணியை செம்மையாக செய்ய வேண்டும் என்று எண்ணம் தோன்றுகிறது.

 

பரிசளித்த மாவட்ட ஆட்சியரின் மகன் குகவேலுக்கும் அவரது பெற்றோர்களுக்கும் நன்றி தெரிவித்தார். இந்த நிகழ்வு காவலர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.