திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த உள்ள தேவிகாபுரத்தில், விஜயநகர பேரசு காலத்தில் கட்டப்பட்ட பெரியநாயகி அம்மன் உடனுறை கனககிரீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்திரத் தேர் திருவிழா 13 நாட்கள் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தை சேர்ந்தவர்களை உபயதாரர்களையும் கொண்டு நடத்தப்பட்டு வரும் இந்த திருவிழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பது வழக்கம்.  கடந்த ஆண்டு நடைபெற்ற திருவிழாவில் வழக்கத்திற்கு மாறாக பட்டியல் இனத்தை சேர்ந்த ஒருவர் கூட்டத்தோடு கூட்டமாக சுவாமி தூக்கும் நிகழ்வில் பங்கேற்றதால் அதற்கு ஊர் மக்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 13 நாட்கள் நடைபெறும் கனககிரீஸ்வரர் கோயில் திருவிழாவில் தங்களையும் ஒரு உபயதாரராக சேர்க்க கோரி பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து அந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. 



இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்தர திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கவிருந்த நிலையில் பட்டியல் இனத்தை சேர்ந்தவர்களை உபயதாரர்களாக சேர்க்கும் முயற்சியில் அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபடுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஊர்மக்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் தங்கள் உத்தரவுக்கு இணங்க சொல்லி மிரட்டல் விடுப்பதாக கூறி கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில், நேற்று இரவு 8:00 மணி அளவில் நடத்திய சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், சேத்துப்பட்டு தாசில்தார் கோவிந்தராஜ், செய்யாறு சிப்காட் தாசில்தார் சுமதி, கோவில் திருவிழா குழு பொறுப்பாளர்கள், ஊர் பொதுமக்கள், மற்றும் அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி லட்சுமி, உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜோதி லட்சுமி கூறும் போது, புதிதாக விழா நடத்த அனுமதி கேட்டு ஒரு தரப்பினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.



எனவே, ஒரு நாள் ஒதுக்கி விழா நடத்துங்கள் என கூறினார். கூட்டத்தில் கலந்து கொண்ட விழாக்குழுவினர், பொதுமக்கள், வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நீதிமன்ற உத்தரவு வரும் வரை பழைய முறைப்படி திருவிழா நடத்த வேண்டும் என்றனர். அதற்கு அறநிலையத்துறை அதிகாரிகள் மறுத்ததால், கூட்டத்தில் இருந்து பொதுமக்கள் வெளியேறினர். இந்நிலையில் இன்று பங்குனி உத்தர திருவிழா கொடியேற்றம் நடக்கவிருந்த நிலையில்,  மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி தேவிகாபுரம் பெரியநாயகி அம்மன் கோவில் திருவிழா மறுஉத்தரவு வரும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து செய்யாறு கோட்டாட்சியர் விஜயராஜ் உத்தரவிட்டுள்ளார்



திருவிழா நிறுத்தப்பட்ட நிலையில் கோயிலில் நடைபெறும் நித்திய பூஜைகள் வழக்கம் போல் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் கோயிலைச் சுற்றி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  இதற்கிடையே ஊர்மக்கள் மற்றும் உபயதாரர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து விழா நடத்த வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் திருவிழாவில் உபயதாரராக சேர்க்க கோரி தனிநபர் தொடுத்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.  இந்தாண்டு திருவிழா நடைபெறுமா என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர் தேவிகாபுரம் கிராம மக்கள்.