திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூர் தாலுகா சிந்தாலூர் கிராமத்தை சேர்ந்த பெரியபையன் மகன் கோவிந்தராஜ் வயது (28). இவர் கட்டிட மேஸ்திரியாக பணியாற்றி வருகிறார். இவர் அந்த கிராமத்தில் சுமார் 3 ஏக்கர் விவசாய நிலம் வைத்து உள்ளார். அந்த இடத்தில் இவர் செங்கல் சூளை வைத்து உள்ளார். இவர் செங்கல் சூளைக்கு தேவையான எரிபொருளுக்காக காய்ந்த விறகுகள் மற்றும் மரக் கட்டைகளை அவரது சொந்த டிராக்டர் மூலமாக ஏற்றி கொண்டு செங்கல் சூளைக்கு எடுத்து சென்று வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஜமுனாமரத்தூர் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு போலீஸ் ஏட்டாக விஜய் என்பவர் பணியாற்றி வந்தார். அவர் கோவிந்தராஜை செம்மரம் கட்டைகள் கடத்துவதாக வழக்கு பதிவு செய்து விடுவேன் என்றும், வழக்கு பதிவு செய்யாமல் இருக்க தனக்கு 1 லட்சம் லஞ்சம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து கோவிந்தராஜ் அவ்வளவு பெரிய தொகையை கொடுக்க முடியாது என்று கூறியதாக தெரிகிறது. அதன் பிறகு கடைசியாக 15 ஆயிரம் ரூபாய் மட்டும் கொடுக்குமாறு விஜய் கேட்டுள்ளார். இதனால் பணம் கொடுக்க மனம் இல்லாத கோவிந்தராஜ் கடந்த மாதம் 25-ந் தேதி திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினரிடம் புகார் செய்தார். இதையடுத்து லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து போலீசார் விஜயை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். இதனிடையே ஏட்டு விஜய் வாணாபுரம் காவல் நிலையத்திற்க்கு மாற்றப்பட்டார். அவர் சில நாட்கள் விடுமுறையில் இருந்தார். பின்னர் அவர் வாணாபுரம் காவல் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பொறுப்பேற்றுக்கொண்டார். இந்த நிலையில், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் ஆலோசனையின் பேரில் கோவிந்தராஜ், தனிப்பிரிவு போலீஸ் ஏட்டு விஜயை வாணாபுரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் சாலைக்கு வரவழைத்தார்.
அதன் பிறகு, கோவிந்தராஜ் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல்துறையினர் கொடுத்து அனுப்பிய ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விஜயிடம் வழங்கினார். அதனை விஜய் வாங்கும் போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் வேல்முருகன் தலைமையில் ஆய்வாளர் பிரபு, காவல்துறையினர் கோபிநாத், முருகன், சரவணன் கொண்ட குழுவினர் அவரை கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். லஞ்சம் வாங்கிய போது தனிப்பிரிவு காவலரை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்