திருவண்ணாமலை, தண்டராம்பட்டு, செங்கம், தானிப்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் அதிகமான குருமன்ஸ் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மலைவாழ் இனத்தவர் என சாதி சான்று வழங்க கோரி கடந்த 2015ம் ஆண்டு முதல் சாலை மறியல், ஆட்சியர் அலுவலகம் வரை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம், வட்டாட்சியர் அலுவலகத்தை இரவு பகலாக முற்றுகையிட்டு போராட்டம் மற்றும் சுடுகாட்டில் தஞ்சமடையும் போராட்டம் என பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்‌.


 




அப்போது இருந்த வருவாய்த் துறையினர் 100 பேருக்கு சாதிச் சான்று வழங்கினார். பின்னர் பழங்குடியினர் ஆய்வின்படி, தங்களுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ் வழங்கப்படும் என ஆய்வுகுழவினர் தெரிவித்தனர். 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் ஆய்வறிக்கை முடிந்துவிட்ட நிலையில், இதுநாள் வரை தங்கள் இன மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் அலைக்கழித்து வரும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நேற்று முதல் திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட குருமன்ஸ் இனமக்கள் தரையில் அமர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இரவு முழுவதும் அங்கேயே தங்கி சமைத்து சாப்பிட்டு வந்தனர்.


 




இந்நிலையில், இன்று காலையில் குருமன்ஸ் இன மக்கள் பள்ளி மாணவர்கள் உட்பட அனைவரும் ஒப்பாரிவைத்து போராட்டத்தை நடத்தினர். அப்போது பல்வேறு கட்சியை சார்ந்த பிரமுகர்கள் அவர்களுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்து சென்றனர். அதன் பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பாலகிருஷ்ணன்  பேச்சுவார்த்தை நடத்தினார். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து கோட்டாட்சியர் அலுவலகத்தில் 200க்கும் மேற்பட்ட காவலர்களை குவித்தனர். அப்போது மீண்டும் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உள்ளிட்ட காவல் துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் இன மக்களிடம் போராட்டத்தை கைவிடும் படி கேட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சு வார்த்தையில் சுமூக நிலை எட்டப்படாததால், டிஐஜி ஆனி விஜயா போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்களை கைது செய்யகோரி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.


 




அதன் பிறகு அங்கு குவிக்கப்பட்ட போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ”அமைதியான முறையில்  போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஏன் எங்களை அராஜக முறையில் கைது  செய்கிறீர்கள்.  போலீசார் பொதுமக்களுக்கா அல்லது அரசியல்வாதிக்கா?,  எங்களை நீங்கள்  தூக்கில் கூட இடுங்கள். ஆனால் எங்கள் குழந்தைகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்குகள். எங்களுடைய உரிமையை கொடுங்கள். ஆட்சியாளர்களும் மற்றும் அரசியல்வாதிகளும் எங்களை ஓட்டு வங்கிக்காக தான் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்” என்று தெரிவித்தனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.




 


போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்களை வலுக்கட்டாயமாக இழுத்து வேனில் ஏற்றினர். பெற்றோரை கைது செய்ததை கண்டு குழந்தைகள் கதறி  அழுதனர். இந்தக் காட்சி பார்ப்போரை கண்கலங்க வைத்தது.


மேலும், நீதிமன்றம் ஆய்வு செய்து தங்களுக்கு சாதி சான்று வழங்க ஆணை பிறப்பித்தும் தற்போது வரை மாவட்ட நிர்வாகம் ஜாதி சான்று வழங்க மறுத்து வருவதாகவும், உடனடியாக தங்களுக்கு சாதி சான்று வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என குருமன்ஸ் இன மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண