விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மண்டல அளவிலான அனைத்து நிலை முன்னணி பொறுப்பாளர்கள் சந்திப்பு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டார். இதற்கு முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வருகிற 23 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடைபெற உள்ளது. வெல்லும் ஜனநாயகம் என்னும் பெயரில் நடைபெற உள்ள இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.


 




மேலும், பல்வேறு தேசிய கட்சியை சேர்ந்த தலைவர்களும் பங்கேற்கின்றனர். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் எனும் பொருளை இந்த மாநாடு உணர்த்தும். 5 மாநில தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் நிலை உள்ளது. மக்களிடையே காங்கிரஸின் செல்வாக்கு பெருகி இருக்கிறது. இந்தியா கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆட்சியில்  இருந்து பா.ஜனதாவை அகற்ற வேண்டும் என்ற ஒற்றை நோக்கமே இந்தியா கூட்டணியின் யுக்தியாகும். அந்த ஒற்றை நோக்கத்தை வலியுறுத்தும் மாநாடாக விடுதலை சிறுத்தைகளின் மாநாடு அமையும். கனமழையில் சென்னை போன்ற நகரங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருந்தாலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அதிகாரிகளையும், அமைச்சர்களையும் எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் களம் இறக்கி உள்ளார்,


 




 


மழை நீரை வடியச் செய்யவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்திடவும் முதல்வர் ஆணையிட்டுள்ளது ஆறுதல் அளிக்கிறது. தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல் நலம் விரைந்து குணமாக வேண்டும். இலங்கையில் சிங்கள அரசு தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உலக நாடுகள் இதனை வேடிக்கை பார்ப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இந்து கோவில்கள் இடிக்கப்படுவதை குறித்து பாஜக அரசு கவலைப்படவில்லை, இந்திய அரசு தமிழர்களின் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களை சிங்களர்களின் ஆக்கிரமிப்புகளில் இருந்து பாதுகாக்க வேண்டும். பாஜக ஆட்சி இல்லாத பிற மாநிலங்களில் ஆளுநர்கள் மூலமாகவும், அமலாக்கத்துறை மூலமாகவும், சி.பி.ஐ மூலமாகவும் நெருக்கடியை தருவது பா.ஜ.க வின் தந்திரமாக உள்ளது. அதை அண்ணாமலை வெளிக்காட்டுகிறார். அவர்களுக்கு தமிழக மக்கள் தேர்தல் நேரத்தில் தகுந்த பாடத்தை புகட்டுவார்கள்” என்று பேசினார்.