திருப்பத்தூரில் மாட்டுப்பொங்கல் தினமான இன்று மாடுகளை மகிழ்விக்கும் வகையில் படையல் போட்டு விவசாயிகள் கொண்டாட்டம்.

 

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் தைத்திருநாளை போகி,  பொங்கல், மாட்டுப் பொங்கல் காணும் பொங்கல் என தொடர்ந்து நான்கு நாட்களாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் கொண்டாடி வரும் நிலையில் இன்று மாட்டுப்பொங்கல் திருநாளை முன்னிட்டு மாடுகளை மகிழ்விக்கும் வகையில் மாடுகளுக்கு படையல் போட்டு பொங்கல் வைத்து விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர்.

 

இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகள் அவரவர் தங்களுடைய பகுதிகளில் மாட்டுப் பொங்கல் தினமான இன்று விவசாயம் சிறப்பாக செய்ய ஒத்துழைத்த மாடுகளை மகிழ்வித்து கௌரவிக்கும் விதமாக வண்ண வண்ண கோலங்கள் இட்டு புது மண் பானையில் புத்தரிசி மற்றும் வெள்ளம் சேர்த்து பொங்கல் வைத்து மாட்டு சாணத்தில் பிள்ளையார் பிடித்து மலர்கள் அணிவித்து மா மற்றும் ஆவாரம் பூவை கொண்டு தோரணங்கள் கட்டி வாழை இலையில் படையல் இட்டு மாட்டிற்கு உணவளித்து மகிழ்ச்சியுடன் விவசாயிகள் கொண்டாடி வருகின்றனர். 



 

மேலும் மாடுகளை குளிப்பாட்டி மஞ்சள் குங்குமம் பூசி பட்டியில் அடைத்து இன்று ஒரு நாள் அது சுதந்திரமாக சுற்றும் விதமாக பட்டியை திறந்து விட்டு ஓட விட்டு மகிழ்ந்தனர். அதன் பிறகு புது கயிறுகளை கட்டி அவரவர் தங்கள் வீடுகளுக்கு மாடுகளை அழைத்துச் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.