உள்ளாட்சி தேர்தலில் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெறாவிட்டால் துரோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும் பாரபட்சமின்றி அடியோடு தி.மு.க.வில் இருந்து நீக்கிவிடுவேன் என அமைச்சர் துரைமுருகன் காட்டமாக பேசியுள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடி சட்டசபை தொகுதிக்குட்பட்ட காட்பாடி மேற்கு ஒன்றிய தி.மு.க. உறுப்பினர்கள் கூட்டம் திருவளத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில் தி மு க பொது செயலாளரும் , தமிழ்நாடு நீர்ப்பாசனம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் துரைமுருகன் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கி பேசினார் .
கூட்டத்தில் அவர் பேசும்பொழுது "நான் காட்பாடி தொகுதியில் 71-ம் ஆண்டு முதல் மகத்தான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்று வருகிறேன். குறிப்பாக காட்பாடி மேற்கு ஒன்றியம் தி.மு.கவின் கோட்டை என்று தான் சொல்லவேண்டும். ஆனால் இந்தமுறை , நாம்தான் நிச்சயவெற்றி என்று சிலர் சரியாக வேலை செய்யாமல் இருந்துவிட்டனர். அதோடு மட்டும் இல்லாமல் , முதல் முறையாக நமது கட்சியை சேர்ந்தவர்களே நான் தோற்கவேண்டும் என்று உள்ளடிவேலையில் செய்துள்ளனர் .
காட்பாடி யூனியன் கிராமங்களில் பெரும்பாலான பூத்களில் ஓட்டு எண்ணும்போது நாம் பின் தங்கிதான் இருந்தோம். நமது தி.மு.க. நிர்வாகிகளே எனக்கு உள்ளடி வேலைகள் செய்தார்கள் என்பது எனக்கு தெரியும். அப்படி யாரெல்லாம் உள்ளடி வேலைகள் செய்தார்களோ அவர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது. என்னை தோற்கடிக்க வேண்டும் என நினைத்தார்கள். ஆனால் நல்ல வேளையாக தபால் ஓட்டினால் வெற்றி பெற்று விட்டேன். இப்போது அவர்களுக்கும் நான்தான் அமைச்சர்.
காட்பாடி தொகுதிக்குட்பட்ட விவசாயிகளின் நலனுக்காக , அம்முண்டி பகுதியில் , கூட்டுறவு சக்கரை ஆளை கொண்டுவந்தது நான் , இதுபோன்று காட்பாடி தொகுதியில் எண்ணற்ற முன்னேற்ற பணிகளை செய்துள்ளேன் . இது மட்டும் அல்லாமல் , கட்சிக்காரர்கள் , பொதுமக்கள் என அனைவருக்கும் குறிகளே இல்லாத அளவுக்கு பல நலத்திட்டப்பணிகளை செய்துள்ளேன். ஆனால் நீங்கள், எனக்கு சரியாக தேர்தல் வேலை செய்யவில்லை. குறிப்பாக திருவலம் பகுதியில் நான் எதிர்பார்த்த ஓட்டு எனக்கு கிடைக்கவில்லை. சில ஆண்டுகள் முன்புவரை காங்கிரஸ் கட்சியின் கூடையாக இருந்த திருவுளத்தை, கட்சிக்காரர்களின் கூட்டு முயற்சியால் இதனை திமுக கோட்டையாக மாற்றியிருந்தோம். ஆனால் அங்கும் எனக்கு ஓட்டு குறைவாகவே பதிவாகி இருந்தது .
எனக்கு வாக்களிக்காமல் துரோகம் செய்தவர்களை, ஒரு தாய் தன் குழந்தையை மன்னிப்பது போல மன்னிக்கிறேன். இனியாவது அனைத்து விருப்பு வெறுப்புகளையும் மறந்து நடக்கப்போகும் உள்ளாட்சிமன்ற தேர்தலில் அலட்சியம், துரோகம் செய்யாமல் உள்ளாட்சியின் அனைத்து பதவிகளிலும் நமது கட்சியினர் வெற்றிபெற வேண்டும். அதற்காக அனைவரும் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
சட்டமன்ற தேர்தல் முடிவுகள்
தமிழ்நாட்டின் 16 -வது சட்டமன்ற வாக்குப்பதிவு 2021 ஆண்டு ஏப்ரல் மாதம் 6 -ஆம் தேதி நடைபெற்றது . இதன் வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 -ஆம் தேதி நடைபெற்றது . இதில் காட்பாடி தொகுதிக்கான சட்டமன்ற தேர்தலின் 25-வது சுற்றின் முடிவில் அதிமுக வேட்பாளர் ராமு திமுக வேட்பாளர் துரைமுருகனை விட 346 ஓட்டுகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். தபால் ஓட்டு எண்ணிக்கை அறிவிக்கப்பட்டதில் , தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் 1,778 வாக்குகள் பெற்றிருந்தார். அ.தி.மு.க வேட்பாளர் ராமு 608 வாக்குகள் பெற்றிருந்தார். இதனால் நிலைமை தலைகீழாக மாறியது. முன்னிலையில் இருந்த ராமு பின்னுக்கு தள்ளப்பட்டார். பழுதான வாக்கு இயந்தரங்களில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு இறுதியாக, 746 வாக்குகள் வித்தியாசத்தில் துரைமுருகன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது .