'சிறைவாசிகளை நல்வழிப் படுத்த சிறைவாசிகளுக்கு தொழில்முறை பயிற்சி மிகவும் அவசியமானது'- என்று இன்று , வேலூர் சிறைத்துறை கல்விச்சாலையில் நடைபெற்ற , சிறைத்துறை அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட டெல்லி சிறைதுறை டிஜிபி சந்தீப் கோயல்  தெரிவித்துள்ளார் . 


வேலூர் தொரப்படியில் , தென் மாநிலங்களிலுள்ள , சிறை துறை அலுவலர்களுக்கான , சிறை நிர்வாகம் மற்றும் பயிற்சி மையம் (Academy Of Prison and Correctional Administration -APCA  ) உள்ளது . இதில் கர்நாடக , ஆந்திர , தெலுங்கானா , கேரளா மற்றும் தமிழ்நாட்டை உள்ளிட்ட தென்மாநிலங்களை சேர்ந்த  சிறைத்துறை அதிகாரிகளுக்கும் , டெல்லி உள்ளிட்ட வடமாநில சிறைத்துறை அலுவலர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டுவருகின்றது  .




இந்நிலையில் கடந்த  நவம்பர் மாதம் வேலூர்  ஆப்காவின் 26 வது பேட்ச்யில் , டெல்லி திகார் சிறையை சார்ந்த , 53 உதவி கண்காணிப்பாளர்கள் , ஆந்திராவை சார்ந்த 3 துணை ஜெயிலர்கள், தமிழ் நாட்டை சேர்ந்த 6  துணை ஜெயிலர்கள் , கேரளாவை சேர்ந்த 3 துணை கண்காணிப்பாளர்கள் , என 4 பெண் அதிகாரிகள் உற்பட 65 அதிகாரிகளுக்கு , கடந்த 9 மாதங்களாக சிறைத்துறை சம்மந்தமான பயிற்சி வழங்கப்பட்டது .


இவர்களுக்கு , சிறை நிர்வாகம் , குற்றவியல் , சமூகவியல் , உளவியல் , மனித உரிமைகள் , இந்திய அரசியலமைப்பு சட்டம் , குற்றவியல் நிதி அமைப்பு , சிறை மேலாண்மை , தடயவியல் உள்ளிட்டவைகள் தொடர்பான வகுப்புகள் நடத்தப்பட்டது .





மேலும் இந்த 65 சிறை அதிகாரிகளுக்கும் , ஆயுதங்கள் கையாளும் பயிற்சி , கூட்டத்தை கட்டுப்படுத்தும் பயிற்சி மற்றும்  உடல் திறன் பயிற்சிகளும் கொடுக்கப்பட்டது . பயிற்சி முடித்த 65  சிறை அலுவர்களுக்கு இன்று பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது ,  பயிற்சி மேற்கொண்ட 65 சிறை அலுவலர்களும் பயிற்சி நிறைவு விழாவில் நடைபெற்ற அணிவகுப்பில் பங்கெடுத்துக் கொண்டனர் . 




பயிற்சி நிறைவு விழாவில் , ஆப்கா இயக்குனர் சந்திரசேகர் , ஆந்திரா சிறைத்துறை டிஜிபி ரவிகரன் ,உள்ளிட்டோர்  பங்கெடுத்துக்கொண்டனர்  . இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக , டெல்லி சிறைத்துறை டிஜிபி , சந்தீப் கோயல் கலந்துகொண்டு பயிற்சியை முடித்த அதிகாரிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார் . 


மேலும் இன்று பயிற்சியை நிறைவுசெய்த சிறை அதிகாரிகள் மத்தியில் பேசுகையில் , "சிறைத்துறை பணி என்பது மிகவும் கடுமையானதும் , சவால் மிக்கதுமாகும் . சிறைகளில் குற்றங்களில் ஈடுபட்டு ஆதரவற்றவர்கள் , சமூகத்து தீங்குவிளைவித்தவர்கள் , கொடுங் குற்றவாளிகள் , உள்ளிட்ட பலதரப்பட்ட குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ளனர் . அவர்களை நல்வழிப்படுத்த தொழில்முறை பயிற்சி மிக அவசியமானது . 




பல வட மாநிலங்களை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள் ஆப்காவில் , ஏற்கனவே பயிற்சி பெற்று இருந்தாலும் , தற்பொழுது தான் முதல் முறையாக , டெல்லியை சேர்ந்த சிறைத்துறை அதிகாரிகள் வேலூர் ஆப்காவிற்கு , பயிற்சிக்காக வந்துள்ளனர் . நீங்கள் இங்கு கற்றுக்கொண்டதை  டெல்லியில் நடைமுறை படுத்தவேண்டும் . 


ஒரு சிறைச் சாலையை வைத்தே  அந்த நாட்டின் நாகரிகத்தை அறிந்து கொள்ள முடியும் என்று , தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலா தெரிவித்துள்ளதாக கூறிய டெல்லி டிஜிபி , எனவே நீங்கள் பணிபுரியும்  சிறைச் சாலைகளையும்  சரியான பாதையில் வழிநடத்தி செல்ல வேண்டும் என்று கேட்டுக்கொண்டார் .