ஆரணி அருகே விவசாயி வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த புதையலை வீட்டின் உரிமையாளர் கொடுக்க மறுப்பு. பின்னர் அதை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த முள்ளண்டிரம் கிராமத்தை சேர்ந்த முனுசாமி வயது (70), இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருடைய மனைவி சகுந்தலா வயது (66). இவர்களுக்கு சொந்தமாக விவசாய நிலம் அப்பகுதியில் உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு முனுசாமியின் இடத்தில் வீடு கட்டும் பணியை தொடங்கினர். இதற்காக கடந்த 23-ம் தேதி அஸ்திவாரம் போடுவதற்காக பள்ளம் தோண்டினர். அப்போது 3 அடி ஆழத்தில் செம்பு பாத்திரம் ஒன்று மூடப்பட்ட நிலையில் இருந்துள்ளது. இதைப் பார்த்த கட்டிட தொழிலாளர்கள், செம்பு பாத்திரத்தை எடுத்து சகுந்தலாவிடம் கொடுத்துள்ளனர். இதை வாங்கிய சகுந்தலா, தங்க புதையல் இருக்கும் என நினைத்து வெளியே யாரிடமும் தெரிவிக்காமல் வீட்டிற்கு எடுத்து சென்று வைத்துள்ளார்.




சகுந்தலாவிற்கு புதையல் கிடைத்த தகவல் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிய வந்துள்ளது. பின்னர் அப்பகுதியில் உள்ளவர்கள் இதுகுறித்து ஆரணி வருவாய்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.இந்த தகவல் அறிந்த தாசில்தார் பெருமாள், வருவாய் ஆய்வாளர் ஸ்ரீதேவி, மற்றும் தாலுகா காவல்நிலைய துணை ஆய்வாளர் ஷாபுதீன் காவல்துறையினர் நேற்றிரவு சகுந்தலாவின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது சகுந்தலா புதையலை வருவாய் துறையினரிடம் தர மறுத்துள்ளார். மேலும், 'புதையல் எங்களுக்கு சொந்தமான இடத்தில் கிடைத்தது. உங்களிடம் தரமுடியாது' எனக்கூறி வருவாய்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர், சகுந்தலாவின் வீட்டில் சோதனை நடத்தினர். பின்னர் மறைத்து வைத்திருந்த புதையல் பாத்திரத்தை பறிமுதல் செய்தனர். ஆனால் அந்த செம்பு பாத்திரம் உடைக்கப்பட்டிருந்தது.




பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் செம்பு பாத்திரத்தில் இருந்த பொருட்களை சோதனை செய்தனர். அதில் கால் சலங்கை மணிகள் 23, உடைந்த நிலையில் காப்பு வடிவிலான பொருட்கள் 10, மணித்துண்டு 1, சிறிய துண்டுகளாக 13 உலோக பொருட்கள், சதுர வடிவிலான உலோக பொருள் 1 ஆகிய பொருட்கள் இருந்தன. இதில் வேறு ஏதாவது பொருட்கள் இருந்து இருக்குமா என சகுந்தலாவின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் புதையல் பொருட்களுக்கு 'சீல்' வைத்து, ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.மேலும் இது குறித்து திருவண்ணாமலை தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த புதையல் பொருட்கள் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கப்படும். அவர்கள் ஆய்வு செய்த பின்னர்தான் புதையலில் இருந்தவை தங்கத்தினால் ஆனா பொருட்களா அல்லது வேறு உலோகமா எத்தனை ஆண்டுகள் பழமையானது போன்ற விவரங்கள் தெரிய வரும்  விவசாயி வீடு கட்டுவதற்காக பள்ளம் தோண்டியபோது கிடைத்த புதையலை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது