சாதி, மதம், பேதம், நிறம் என இந்த உலகம் பல கருத்து வேறுபாடுகளால் பிளவுபட்டு கிடந்தாலும் இன்னும் இந்த உலகை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒன்று அன்பு. அந்த அன்பு ஒவ்வொரு வடிவத்தில் ஒவ்வொரு மனிதருக்கும் கிடைக்கிறது, அன்பின் மறுபெயரான காதல் மட்டும் இதில் மிகவும் தனித்துவமாகவும், மகத்துவமாகவும் கருதப்படுகிறது. ஏனென்றால் நினைவுகள், உணர்வுகள் என ஒரு மனிதனை மொத்தமாக மாற்றும் ஆற்றலும், வல்லமையும் அந்த காதலுக்கு உண்டு.
காதலர் தினம்:
அப்பேற்பட்ட சக்தி கொண்ட காதலை போற்றும் விதமாக கொண்டாடப்படும் நாள்தான் காதலர் தினம். ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் 14ம் தேதி இந்த காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. காதலிப்பவர்கள் மட்டுமின்றி தம்பதிகளும் தற்போது காதலர் தினத்தை இனிதே கொண்டாடி வருகின்றனர். காதல் ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு உருவமாக வடிவெடுத்து நின்று வருகிறது.
90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என்ற தலைமுறை இளைஞர்களுக்கு மத்தியில் காதல் என்பது மிக வேகமாக ஏற்படுவது போல, அதே வேகத்தில் காதல் முறிவு ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், பலருக்கும் குழப்பமான ஒன்று காதல் துணையை எவ்வாறு தேர்வு செய்வது என்பதே ஆகும். பார்த்தவுடன் காதல் என்பது திரைப்படங்களில் காட்டப்பட்டு, காட்டப்பட்டே நம்மில் பலருக்கும் பார்த்தவுடன் காதல் உருவாகிடும் என்ற ஃபார்முலா உள்ளது. ஆனால், அந்த பார்த்தவுடன் காதல் நீடிக்கவே குணம்தான் முக்கியம் என்பது மிக மிக பிரதானம் ஆகும்.
காதல் துணையை தேர்வு செய்வது எப்படி?
காலமெல்லாம் நம் கரம் கோர்த்து வாழும் துணையை தேர்வு செய்ய, நாம் பார்க்க வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வாழ்வில் நிச்சயம் ஏற்றம், இறக்கம், சறுக்கல்கள் அனைத்துமே வரும். சில சூழல்கள் நாம் நொறுங்கி உடைந்து விடும் நிலைக்கு கூட நம்மை ஆட்படுத்தும். அப்பேற்பட்ட மோசமான சூழலிலும், அதாவது வாழ்வில் நாம் எந்த மோசமான சூழலை சந்தித்தாலும், அந்த சூழலிலும் உங்களை விட்டுப்போகாத ஒருவரை தேர்வு செய்யுங்கள்.
ஏனென்றால், காதலிலும், தம்பதிகள் மத்தியிலும் விட்டுக்கொடுத்து போவது எந்தளவு இருவரையும் நெருக்கமாக்குமோ, அதே அளவு எந்த மோசமான சூழல் உருவானாலும் ஒருவரை ஒருவரை விட்டுக்கொடுக்காமல் இருப்பதும் காதலை இன்னும் அதிகரிக்கச் செய்யும். சந்தோஷங்களையும், மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொள்ள முன்பின் அறியாதவர் கூட உடன் வருவார்கள். ஆனால், மோசமான துயரங்களில் கை கொடுத்து தூக்கிவிட, உடன் இருந்து உதவி செய்ய நன்றாக தெரிந்தவர்கள் அனைவருமே துணை நிற்க மாட்டார்கள் என்பதே உண்மை.
மனம் விட்டு பேசுங்கள்:
இதனால், உங்கள் காதல் துணையிடம் என்ன நடந்தாலும் நான் உன்னை விட்டு விலகமாட்டேன் என்ற நம்பிக்கையை ஆழமாக விதையுங்கள். இருவரும் ஒருவருக்குள் விதைக்கும் அந்த விதையானது தோல் சுருங்கி முடி நரைத்து பார்வை மங்கினாலும் ஒருவரின் கரத்தை ஒருவர் விட்டுவிடாத வகையில் இறுகப்பற்ற வைக்கும்.
இன்றைய காலத்தில் காதலில் மிக எளிதாக சண்டை ஏற்படுகிறது. வீண் கோபம், பிடிவாதம், வாக்குவாதம் வருகிறது. இதனால் இறுதியில் பிரிவு ஏற்படுகிறது. காதலை பொறுத்தவரை பிரிந்து செல்வது என்பது தீர்வாகாது ( உங்கள் துணை உங்களுக்கு நேர்மையற்றவராக இருந்தாலோ, அவரது குணாதிசயம் தவறானதாக இருந்தாலோ பிரிந்து செல்வதே நல்லது). அவ்வாறு பிரிந்து செல்வதால் ஏற்படும் உங்கள் இருவருக்கும் ஏற்படும் மன உளைச்சல் மிக மிக ஆழமான வலியை ஏற்படுத்தக்கூடியது. இதனால், மனம் விட்டு பேசுங்கள். இங்கு மனம் விட்டு பேசாததாலே பல உறவுகள் முறிவுக்கு ஆளாகியுள்ளது.
உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள்:
செல்போன் உரையாடல்கள், வாட்ஸ் அப் மெசேஜ்கள் உங்கள் உணர்வுகளை முழுமையாக பிரதிபலிக்காது. கண்களுக்கு உணர்வுகளை வெளிப்படுத்தும் தன்மை உண்டு. அதிலும், காதலை வெளிப்படுத்தும் உணர்வு கண்களுக்கு மிக அதிகமாகவே உண்டு. அதனால், உங்கள் துணையுடன் ஏதேனும் பிரச்சினை இருந்தால் நேருக்கு நேர் சென்று கண்களை பார்த்து பேசுங்கள். நிச்சயம் உங்கள் பிரச்சினைகளை உங்களால் சரி செய்ய முடியும். அவர்கள் அனுமதியுடன் கைகளை இறுகப்பற்றி காதல் துணையிடம் மனம் விட்டு உண்மையை பேசுங்கள்.
அதேபோல, காதலில் எந்தளவு உங்கள் துணையிடம் காதலை வெளிப்படுத்த நினைக்கிறீர்களோ, அதே அளவு நீங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். என்னதான் உங்கள் காதலியோ, காதலனாகவோ இருந்தாலும் அவர்களது முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். சில தருணங்களில் காதலில் ஒருவர் மட்டும் தன் காதலை புரிய வைக்க தொடர்ந்து போராடிக் கொண்டிருந்தால், அது அவரது துணைக்கு எரிச்சலையும், கோபத்தையும் கூட ஏற்படுத்தலாம். நீங்கள் விரும்பிய ஒருவருக்கு உங்களை முழுவதும் பிடிக்கவில்லை என்றாலோ, உங்களை விட இன்னொரு துணையுடன் இருந்தால் அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று நீங்கள் கருதினாலோ விலகிவிடுவதே நல்லது. விட்டுப்பிரிந்து விட்டோம் என்பதால் எந்த சூழலிலும் உங்கள் காதல் துணையை அவதூறாக பேசவே பேசாதீர்கள். உடன் இருக்கும் போது நாம் ரசித்த ஒருவரை, விட்டுச் சென்ற பிறகு தூற்றுவது எந்த வகையில் நியாயம் ஆகும்?
பிடித்தவர்களுக்கு பிடித்தது:
ஏனென்றால், பிடித்தவர்களுக்கு பிடித்ததை கொடுப்பதே காதல், அது பிரிவாக இருந்தாலும் கொடுத்துதான் தீர வேண்டும். அது அவர்களின் மகிழ்ச்சிக்காகவே. காதல் என்பது அழகு, பணம், வசதி என்பதை கொண்டு கட்டமைக்கப்பட்டது இல்லை. அது நம்பிக்கை, அன்பு, என்ன நடந்தாலும் உடன் இருப்பது போன்ற அழகான விஷயங்களால் கட்டமைக்கப்பட்டது.