தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இன்றளவும் சாதிய கொடுமைகள் அரங்கேறி வரும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகிறது.




தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குலசேகரபுரம் ஊராட்சி சேர்ந்த பகுதி பெருமாள்பட்டி. இந்த கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் காலனியில் 30-க்கும் மேற்பட்ட அருந்ததியர் சமூகத்தினை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எம்.ஜிஆர் முதல்வராக இருக்கும் போது அரசு சார்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் இப்பகுதியில் சரியான அடிப்படை வசதிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று கூறப்படுகிறது.




வாசல் வைக்கக்கூடாது:


இந்த காலனியில் உள்ள தெருக்கள் குறுகலான தெரு என்பதால் அங்கு வாழக்கூடிய மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனர். இந்த காலனியின் பின்பு அதில் இருக்கக்கூடிய பெரிய சாலை பகுதியை பார்த்து வீட்டின் வாசலை வைக்க வேண்டுமென்றால், அப்பகுதியில் குடியிருக்க கூடிய மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்து பல ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்து முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், மாறாக தங்களுக்கு பல்வேறு இடையூறுகளும், அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவித்த காரணத்தினால் இதனை வெளியே சொல்ல முடியாமல் பல ஆண்டுகளாக மௌனமாக வாழ்ந்து வருவதாக வேதனையுடன் கூறுகின்றனர்.




இந்தக் காலனியில் உள்ள வீடுகள் மிகச் சிறியவை. ஒரே வீட்டில் ஆறு முதல் ஏழு பேர் இருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. ஆகையால் அருகில் உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் தங்களது குழந்தைகளுக்கு வீடுகள் கட்டி தர பலமுறை மனு அளித்தும் எவ்வித பதிலும் இல்லை. மின்விளக்கு வசதி , சாலை வசதி , கழிப்பிட வசதி என்ன எவ்வித அடிப்படை வசதி இல்லாமல் ஒருபுறம் அவதிப்பட்டு வருகின்றோம். மறுபுறம் தீண்டாமை என்ற சொல்லால் தங்கள் வீட்டு வாசலை கூட தெருவினைப் பார்த்து வைக்க முடியவில்லையே என்ற மன வேதனையுடன் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர்.






அப்பகுதி பொதுமக்கள். இப்பிரச்சனை குறித்து தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரை தொடர்பு கொண்ட போது அவருடைய செல்போனின் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக தீண்டாமை என்ற கொடிய விஷத்துடன் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் அவதிப்பட்டு வரும் மக்களுக்கு சமூக நீதி கிடைக்குமா? என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று முழங்கிய முண்டாசு கவி வாழ்ந்த பகுதியில் ஜாதிகள் உள்ளது என்று தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவது சமூக நீதி குறித்த கேள்வியை எழுப்பி உள்ளது.