புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே, செந்தமிழ் நகர்ப் பகுதியைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அவர் வீட்டிற்கு மேல்தளம் அமைக்கும் பணி நடைபெற்றிருக்கிறது. வழக்கமாக வீட்டின் மேல்தளம் அமைக்கும்போது, அன்று பணியாற்றும் கொத்தனார், சித்தாள் அவர்களின் உறவினர்கள் பலருக்கும் கறிசோறு போடுவது வழக்கம். இந்த நிலையில், சித்திரைவேல், அறந்தாங்கியில் உள்ள ஒரு பிரியாணி கடையிலிருந்து 40 பிரியாணி பொட்டலங்களை வாங்கி வந்து அங்கு வேலை செய்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார். அடுத்த சில மணி நேரங்களுக்குள்ளேயே பிரியாணியை சாப்பிட்ட கட்டடத் தொழிலாளர்கள் பலரும் அடுத்தடுத்து மயங்கியுள்ளனர். சிலருக்கு வயிற்றுவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படவே, உடனே அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்றனர். பிரியாணியைச் சாப்பிட்ட 46 பேர் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கனிமொழி என்ற பெண் ஒருவர் மட்டும் இங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

 

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற அறந்தாங்கி காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே, உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் பிரவீன்குமார் தலைமையில் சம்பந்தப்பட பிரியாணிக் கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்குள்ள உணவுப் பொருள்களை ஆய்வு செய்தனர்.

 



 

இந்நிலையில் தற்போது அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் 10-ம் வகுப்பு மாணவன் ராமநாதன் உள்பட 23 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளவர்களின் உறவினர்கள் இன்று அறந்தாங்கி அரசு மருத்துவமனை முன் குவிந்தனர். பின்னர் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு எதனால் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதுகுறித்து விவரம் சம்பந்தபட்ட உணவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. கடந்த ஒரு வாரமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ள எங்களது உறவினர்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கோரி அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.  இதுகுறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி காவல்துறை ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், உணவுத்துறை அதிகாரி ஜேம்ஸ், தாசில்தார் காமராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள் கூறும் போது  அந்த பிரியாணியில் 'ஸ்டபைலோ காக்கஸ் ஆரியஸ்' என்ற பாக்டீரியா தொற்று இருந்து கெட்டுப்போனது தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பிரியாணியை சாப்பிட்டவர்களின் மாதிரியை ஆய்வு செய்ததில் பாக்டீரியா தொற்று கண்டறியப்படவில்லை என்றனர்.

 



 

மேலும் பிரியாணி மாதிரியின் ஆய்வு முடிவை வைத்து உணவு பாதுகாப்புத்துறை தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கும் என மாவட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். அண்மையில் கேரளாவில் ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த நிலையில், அந்த ஷவர்மாவில் ஷிஜெல்லா எனும் வைரஸ் தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து  அதிகாரிகள் சம்பந்தப்பட்டவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். வாந்தி-மயக்கம் ஏற்பட்டத்திற்கான காரணம் மருத்துவ சான்றிதழ் வந்தவுடன் தெரிவிக்கப்படும் என்று கூறினர்.

 

இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் 1½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறந்தாங்கி காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.