நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் கட்சியினை தொடங்கி மாவட்டம், வட்டம், பகுதி, ஊராட்சி, ஒன்றியம், நகராட்சி, பேரூராட்சி போன்று அனைத்து இடங்களிலும் நிர்வாகிகளை நியமனம் செய்து கட்சி பணியை தீவிரப்படுத்தியுள்ளார். 


அதேபோல் தவெக கட்சி சார்பாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகிறார்கள். குறிப்பாக அனைத்து மாவட்டங்களிலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வதற்காக வழக்கறிஞர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.


மேலும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வரை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் உடனிருந்து பணியாற்ற வேண்டும் எனவும் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். 


குறிப்பாக தமிழ்நாட்டில் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் தான் நமது இலக்கு, அதை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.  


இந்நிலையில் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும், தேர்தலுக்கு முன்பாக தமிழக வெற்றி கழகத்தை பலப்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கு கட்சியின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனைத் தொடர்ந்து தவெக சார்பாக  மண்டல மாநாடுகள், மாநில மாநாடு இந்த ஆண்டு  நடத்த திட்டமிட்டுள்ளனர். 


இதற்காக தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மாநாடு நடத்துவதற்காக தவெகவின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் இடங்களை ஆய்வு  செய்து வருகிறார்.


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சியில் நடத்த வேண்டும் என கோரிக்கை வலுவாக எழுந்துள்ளதாக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


திருச்சியில் தமிழக வெற்றி கழகம் மாநாடு நடத்த காரணம் என்ன?


திருச்சி என்றாலே திருப்புமுனையை ஏற்படுத்தும் என்பதில் திராவிட கட்சிகளுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. ஆகையால் தான் கட்சி, அரசியல், தேர்தல் சம்பந்தமான எந்த ஒரு நிகழ்ச்சியை தொடங்கினாலும்  திருச்சியை மையப்படுத்தியே திராவிட கட்சிகள் நடத்துவது வழக்கம்.


ஏனென்றால் அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணநிதி, ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின் வரை தமிழ்நாட்டை ஆண்ட அனைவரும் தங்களுடைய அரசியல் சார்ந்த முடிவுகளை திருச்சியில் தான் எடுத்துள்ளனர். 


குறிப்பாக திருச்சியை மையப்படுத்தி அரசியல் ரீதியான நகர்வை நகர்த்தினாலும் நிச்சயம் அது வெற்றியை ஏற்படுத்திக் கொடுக்கும் என்று திராவிட கட்சிகள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையாக உள்ளது. 


தமிழ்நாட்டை பொறுத்தவரை திராவிட கட்சிகளுக்கு மட்டும் திருச்சி திருப்புமுனையாக அமையவில்லை, பல்வேறு கட்சிகள், அமைப்பினருக்கு திருச்சி திருப்புமுனையாக அமைந்துள்ளது என தெரிவிக்கின்றனர்.


அந்த வகையில் தற்போது தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடத்தினால், மிகப்பெரிய ஒரு திருப்புமுனையை தமிழ்நாட்டில் ஏற்படுத்த முடியும். குறிப்பாக 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெறும் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். ஆகையால் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு திருச்சியில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


 


பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தமிழக வெற்றிக்கழக மாநாடா? என்ன காரணம்..


திருச்சி பொன்மலை ஜி கார்னர் ரயில்வேக்கு சொந்தமான 8 ஏக்கர் பரப்பளவில் மைதானம் உள்ளது. இந்த இடத்தில் தான் அதிமுக, திமுக இரு திராவிட கட்சிகளும் மாபெரும் மாநாட்டை நடத்தினர். அதன் பிறகு தங்களுடைய அரசியல் பயணத்தை தொடங்கலாமா, வேண்டாமா, தேர்தலில் போட்டியிடலாமா, வேண்டாமா என்ற முடிவை எடுத்தது இந்த இடம் தான். 


அதன் பிறகு தான் தமிழ்நாட்டில் இரண்டு திராவிட கட்சிகளும் மாபெரும் கட்சிகளாக வளர்ச்சி அடைந்து ஆட்சி அமைத்தனர். ஆகையால் தான் திருச்சி திராவிட கட்சிகளுக்கு எப்போதும்  திருப்புமுனையாக அமையும், வெற்றியை தேடி தரும் என்று மிகுந்த நம்பிக்கை உள்ளது. 


குறிப்பாக தற்போது பிரதமராக உள்ள மோடி, பிரதமர் தேர்தலில் நிற்பதற்கு முன்பாக பாஜக சார்பில் இதே இடத்தில் மிகப்பிரமாண்டமான மாநாடு நடத்தப்பட்டது. அந்த தேர்தலில் மோடி  மாபெரும் வெற்றி பெற்றார்.


ஆகையால் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு திருச்சி பொன்மலை ஜி கார்னர் பகுதியில் நடத்த வேண்டும் என திட்டமிட்டுள்ளதாக தகவல்.


இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மாநில மாநாடு ஜி. கார்னர் பகுதியில் நடத்துவதற்காக ரயில்வே கோட்ட மேலாளரிடம் , கட்சி நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். ஆனால் அந்த கடிதத்தில் தேதி ஏதும் குறிப்பிடப்படாததால் ரயில்வே துறை சார்பில் தேதி குறிப்பிட்டு மீண்டும் கடிதம் வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


இந்நிலையில் ஜி கார்னர் பகுதியில் மாநாடு நடத்தப்பட்டால் சென்னை - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகையால் பொதுமக்களுக்கும் இடையூறு அளிக்காத வண்ணம் மாநாடு நடத்த வேண்டும் என தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


அதேசமயம் தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜயின் முதல் மாநாடு என்பதால் தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான நிர்வாகிகள், மக்கள் வருகை தருவார்கள். ஆகையால் ஜி.கார்னர் பகுதியில் மாநாடு நடத்துவது சிரமம் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது.