திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் மகப்பேறு சிகிச்சை பிரிவு, குழந்தைகளுக்கான சிகிச்சை பிரிவு, மூளைநரம்பியல் சிகிச்சை பிரிவு, எலும்புமூட்டு சிகிச்சை பிரிவு உள்பட பல்வேறு நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகள் உள்ளன. திருச்சி மாவட்டம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்களும் உயர்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். இங்கு உள்நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளாக என தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் சிகிச்சை பெறுகிறார்கள். இது தவிர, நோயாளிகளின் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்கள் என அரசு மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த மருத்துவமனை வளாகத்துக்கு வரும் பொதுமக்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கு வாகனநிறுத்துமிடம் உள்ளது. அங்கு டோக்கன் வழங்கப்பட்டு முறைப்படி வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. ஆனால் அங்கு போதுமான அளவுக்கு வாகனங்களை நிறுத்த முடியாமல் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால் விபத்து மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைபிரிவு கட்டிடத்துக்கு அருகே கூடுதலாக இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஏற்படுத்தப்பட்டது.




மேலும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு நோயாளிகளை பார்க்க சென்று வந்தனர். இந்தநிலையில் விபத்து மற்றும் உயர் சிறப்பு சிகிச்சைபிரிவு அருகே செயல்பட்டு வந்த வாகன நிறுத்துமிடம் திடீரென தடுப்புகள் அமைத்து மூடப்பட்டுள்ளது. இதற்கு அங்கு இருசக்கர வாகனங்கள் திருட்டு போவதே காரணம் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே அரசு மருத்துவமனை வளாகத்தில் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி திருட்டு போய் உள்ளன. இந்த திருட்டு சம்பவங்கள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்பு இரவு பணிக்கு வந்த சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் வாகனமும் திருட்டு போனது. அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 2 வாலிபர்கள் லாவகமாக அந்த வாகனத்தை திருடி செல்லும் காட்சி இடம் பெற்று இருந்தது. இது குறித்து அரசு மருத்துவமனை போலீசார் விசாரணை நடத்தியும், இருசக்கர வாகன திருடர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. 




இதேபோல் பொதுமக்கள் பலரும் தங்களது இருசக்கர வாகனங்களை பறிகொடுத்துள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததின் அடிப்படையில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்தில் ஆங்காங்கே திருடர்கள் ஜாக்கிரதை என்ற எச்சரிக்கை பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன. ஆகவே இருசக்கர வாகன திருட்டை தடுக்க போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வாகன நிறுத்துமிடத்தை முறைப்படுத்தி பாதுகாப்புடன் கூடிய கூடுதல் பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.