திருச்சி: அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் 42 நாட்கள் தொடர் மக்கள் சந்திப்பு பயணத்தை மேற்கொள்ள இருக்கிறாராம். இதை திருச்சியில் இருந்து தொடங்குவார் என்று சொல்றாங்க. இதனால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழம் என்ற கட்சியை தொடங்கி தனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்து விட்டார். இனி சினிமாவில் நடிக்க போவதில்லை. ஜனநாயகன் திரைப்படம்தான் கடைசி படம் என்று தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்டபோது வீட்டிற்குள்ளேயே இருக்கிறார். வெளியில் வந்து மக்களை சந்திக்கவில்லை என்று விஜய் மீது விமர்சனங்கள் எழுந்தது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கும் விதமாக படப்பிடிப்பில் கலந்து கொள்ள மதுரை வந்த விஜய்யை காண திரண்ட கூட்டம் மற்ற அரசியல்வாதிகள் வயிற்றில் புளியை கரைத்தது.

களத்துக்கு வராமல், பத்திரிகையாளர்களை சந்திக்காமல் விஜய் கட்சி நடத்துவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. கோவையில் விஜய் காரை பின் தொடர்ந்த தொண்டர்கள் பலர் விபத்தில் சிக்கினர். இந்நிலையில் கடந்த மே மாதம்  ஜனநாயகன் படப்பிடிப்புக்காக சென்னையில் இருந்து கொடைக்கானல் புறப்பட்டுச் சென்ற விஜய், சென்னை விமான நிலையத்தில் முதல்முறையாக செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். பின்னர் மதுரை விமான நிலையில் இறங்கிய அவருக்கு அளிக்கப்பட்ட பிரமாண்ட வரவேற்பு பேசும் பொருளானது.

இந்நிலையில் ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணம் திருச்சி அல்லது மதுரையில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. மதுரையை விட தவெக தலைவர் திருச்சியைதான் தேர்வு செய்வார். அங்கிருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லலாம் என்பதால் திருச்சியில் இருந்துதான் இந்த பயணம் தொடங்கப்படும் என்று கூறப்படுகிறது. 

சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கின்றன. இதனால்அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் பம்பரம் போல் சுற்றுகின்றனர். தமிழ்நாட்டில் இந்த 2026 சட்டமன்ற தேர்தலில் புதிதாக களம் காணவுள்ள நடிகர் விஜய்-ன் தமிழக வெற்றிக் கழகமும் மும்முரமாக பணிகளை மேற்கொண்டு வருகிறது. சில கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், கட்சியின் அடிப்படை கட்டமைப்புகளில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார். 

ஏற்கனவே தனது கடைசி படமான ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பை விஜய் முழுமையாக முடித்து கொடுத்துள்ளார். இதனால் இனி முழு நேரம் அரசியலில் தீவிரம் காட்ட தயாராகி வருகிறார். முதல் படியாக கோவையில் பூத் கமிட்டி மாநாடு நடத்தப்பட்டதை போல் அடுத்ததாக மதுரை, தர்மபுரி, திருச்சி, வேலூர், நெல்லை ஆகிய மாவட்டங்களில் பூத் கமிட்டி மாநாடு நடத்த முடிவு எடுத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் விஜய்யின் முதன்மை திட்டமாக மக்கள் சந்திப்பு பயணம் அமையவுள்ளது.

அதாவது 42 நாட்கள் தமிழ்நாடு முழுவதும் விஜய் மக்களை சந்திக்க திட்டமிட்டுள்ளராம். இதற்கான பணிகளை தவெக மாவட்டச் செயலாளர்கள் மேற்கொள்ள வேண்டும் என்று தலைமை அறிவுறுத்தி இருக்கிறது. ஜூலை 2வது வாரம் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் தொடங்கலாம் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

விஜய்யின் தேர்வு திருச்சியாகதான் இருக்கும் என்று சொல்லப்படுகிறது. இதற்கான பிரத்யேக பிரச்சார வாகனமும் தயார் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதற்காக மாவட்டச் செயலாளர்களிடம் வழித்தடம் தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டிருக்கிறது. ஏற்கனவே விஜய்-க்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல ஆதரவு இருந்து வரும் சூழலில், மக்கள் சந்திப்பு பயணம் மூலமாக தவெக பெண்கள் மற்றும் சீனியர்களின் ஆதரவை பெறவும் வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய் என்ன பேச வேண்டும் என்பதற்கும் தனியாக ஒரு குழு உரைகளை வடிவமைத்து வருவதாக சொல்லப்படுகிறது. எந்தெந்த மாவட்டத்தில் முக்கியம் பெறும் பிரச்சினைகளை லிஸ்ட் எடுத்து பேசுவார் என்று தெரிகிறது. 

அதுமட்டுமல்லாமல் கட்சி நிர்வாகிகளிடையே கோஷ்டி பூசல் இருக்கக் கூடாது என்று விஜய் கடுமையான உத்தரவு ஒன்றையும் பிறப்பித்துள்ளார். இதனால் விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை கட்சி நிர்வாகிகள் இணைந்து மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்போதோ திருச்சி தவெக நிர்வாகிகள் பரபரப்பாகி உள்ளனர்.