திருச்சி மாநகராட்சி அம்ருத் திட்டத்தின்படி பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் மாநகராட்சி பகுதிகளில் சுமார் 638 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் பணிகள் முடிந்த 409 கி.மீ பகுதிகளில் 90 கி.மீ அளவிற்கு தார் சாலைகள் அமைக்கும் பணிகள் நடந்து முடிந்துள்ளது. மேலும் 180 கி.மீ அளவிற்கு தார்சாலைகள் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதுபோல் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பாதாள சாக்கடைக்காக குழாய் பதிக்கும் பணிகள் 210 கி.மீ அளவிற்கு நடக்கிறது. இதில் 70 கிமீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்து, தற்போது தார் சாலைகள் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் 40 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. அதுபோல் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் 103 கிமீ அளவிற்கு நடந்து வருகிறது. இதில் 72 கி.மீ அளவிற்கு பணிகள் நடந்து முடிந்துள்ளது. இந்த பகுதிகளில் ஒரு மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 




குறிப்பாக மொத்தம் 167.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இதில் பொதுமக்களின் தேவைகளை அறிந்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநகராட்சி மன்ற பொறுப்பாளர்கள் அதிகாரிகள் மூலம் பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப்பட்டு அரசு நிதி பெற்று நிறைவேற்றப்பட்டு வருகிறது. ஆனால் இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், திருச்சி மாநகராட்சியில் மந்த கதியில்  பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் புதிய குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக பல்வேறு பணிகளுக்காக சாலையில் தோண்டபட்ட பள்ளங்கள் முழுமையாக மூடபடாமல் இருப்பதால் தொடர்ந்து விபத்துகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கபடவில்லை என குற்றச்சம்சாட்டினர். பொதுமக்களின் நலனில் அக்கறை காட்டாமல் , டெண்டர் எடுத்தவர்களுக்கு மட்டும் சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டு வருகிறார்கள். சிறிது நேரம் மழை பெய்தாலே சேரும், சகதியுமாக சாலைகள் காட்சி அளிக்கிறது, அதே சமயம் சாலைகளில் தோண்டபட்ட பள்ளங்கள் சரியாக மூடபடததால் வாகனத்தில் செல்பவர்கள், நடந்து செல்பவர்கள் விபத்துக்கு ஆளாகிறார்கள். 




இந்நிலையில் திருச்சியி முக்கியமான இடமாக கருதபடும் தென்னூர் உழவர் சந்தைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக உள்ளதால், பொதுமக்கள் காய்கறிகள் வங்குவதற்கு சில கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. மேலும் அப்பகுதி பொதுமக்களிடம் கேட்டபோது.. தென்னூர் உழவு சந்தையில் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனையும் நடைபெற்று வருகிறது.  மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகளை வாங்குவதற்காக  பல்வேறு பகுதிகளில் இருந்து உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வருவார்கள். அனைவருமே இந்த பாதையை தான் பயன்படுத்துகிறார்கள்.


இந்த பிரச்சனை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் இந்த சாலை மிகவும் மோசமாக நிலையை அடைகிறது. அப்போதெல்லாம் அதிகாரிகள் தற்காலிகமாக அந்த சாலையை சீரமைப்பார்கள், அதே சமயம் அந்த சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் பல விபத்துகளும் நடந்துள்ளது. இந்நிலையில் மழைக்காலம் தொடங்கும் முன்னே அவபோது மாலை நேரங்களில் பெய்யும் சாதாரண மழைக்கே இந்த சாலை தாக்குப் பிடிக்க முடியவில்லை. அதுமட்டுமில்லாமல் சாலையில் இருபுறங்களிலும் பாதாள சாக்கடை பணிகள் முழுமையாக முடிக்கப்படாமலும், சாலை நடுவே தோண்டப்பட்ட பள்ளங்களை மூடப்படாமல் இருப்பதால் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு முதியவர் அந்த சாலையில் ஓரமாக நடந்து செல்லும் போது தவறி கீழே விழுந்து விட்டார். இது போன்ற விபத்துக்கள் நடப்பதாக தெரிவித்தாலும் இதுவரை எந்த நடவடிக்கையும் மாநகராட்சி அதிகாரிகள் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள்.