தமிழ்நாடு அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் மூலம் மத்திய அரசின் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியத்தின் நிதியுதவி (100%)யுடன், பிரதான் மந்திரி சம்படா யோஜனா திட்டம் 2022-23 இன் கீழ் ஆறுகளில் நாட்டு இன நன்னீர் மீன்குஞ்சுகள் இருப்பு செய்தல் (River Ranching Programme Under (PMMSY) செயல்படுத்திட ஏதுவாக மொத்தம் ரூ.120 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இத்திட்டமானது நாட்டு இன மீன் வகைகளான சேல் கெண்டை, கல்பாசு கெண்டை, இந்திய பெருங்கெண்டை மீன்களான கட்லா, ரோகு மற்றும் மிர்கால் ஆகியவற்றின் சினை மீன்கள் ஆறுகளிலிருந்து சேகரிக்கப்பட்டு மேட்டூர் அணை, பவானிசாகர், தஞ்சாவூர் மற்றும் மணிமுத்தாறு ஆகிய அரசு மீன்குஞ்சு உற்பத்தி பண்ணைகளில் தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அம்மீன்குஞ்சுகள் விரலிகளாக வளர்க்கப்பட்டு மொத்தம் 40 இலட்சம் மீன் விரலிகள் தமிழ்நாட்டில் காவிரி, பவானி, தாமிரபரணி, வைகை ஆகியவற்றின் கிளை ஆறுகளில் இருப்பு செய்யும் திட்டமே River Ranching ஆகும்.


இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் உள்நாட்டு மீன்வளத்தினை பெருக்கிடவும், ஆற்று மீன்பிடிப்பினை நம்பியுள்ள உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்திடவும், அழிந்து வரும் நாட்டு இன மீன் இனங்களை பாதுகாத்திடவும் ஆறுகளில் நிலைத்த வளம் குன்றா மீன்வளத்தை பேணுதல் (Sustainable stock maintenance of native fish species in rivers) போன்றவை இத்திட்டத்தின் நோக்கமாகும்.




அதன்படி காவேரி ஆற்றிலிருந்து சினை மீன்கள் சேகரிக்கப்பட்டு, அரசு மீன் உற்பத்தி நிலையங்களான தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை மீன்குஞ்சு உற்பத்தி நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தூண்டுதல் முறையில் மீன்குஞ்சு உற்பத்தி செய்யப்பட்டு, அவை விரலிகளாக வளர்க்கப்பட்டு, தற்போது காவேரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் இருப்பு செய்யப்பட உள்ளது. அதன்படி, காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் 1.25 இலட்சம் நாட்டு இன மீன்குஞ்சுகள் இருப்பு செய்யப்பட உள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் ஆறுகளில் நாட்டு இன கெண்டை மீன்களின் இருப்பு (Stock) அதிகரிக்கப்படும். இதன் மூலம் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் நிலை நிறுத்தப்படும். இந்நிலையில் தமிழ்நாடு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள்  திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், முக்கொம்பு மேலணை காவிரி ஆற்றில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூபாய் 4.50 இலட்சம் மதிப்பீட்டில் நாட்டு இன மீன் குஞ்சுகளை ஆறுகளில் இருப்பு செய்தல் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.


மேலும், இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.மா.பிரதீப் குமார் இ.ஆ.ப.,அவர்கள், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எம்.பழனியாண்டி அ அவர்கள், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.சீ.கதிரவன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் (திருச்சி மண்டலம்) திருமதி.ஆர்.சர்மிளா, உதவி இயக்குநர், திருமதி.ப.ரம்யாலட்சுமி. ஒன்றியக் குழுத் தலைவர் திரு.துரைராஜ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.